ஆந்திராவில் இரண்டு சிறுவர்களை கடத்தி 19 வயது இளைஞன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி 6 வயது சிறுவன் ஒருவனை காணவில்லை என தடேபள்ளி காவல் நிலையத்தில் அச்சிறுவனின் பெற்றோர் புகாரளித்தனர். இதையடுத்து போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அடுத்த சில நாட்களில் அந்த சிறுவனின் உடல் தடேபள்ளிக்கு அருகில் இருக்கும் கோவா பழத்தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் விசாரணையை துரிதப்படுத்தினர்.
விசாரணை முடிவில் சிறுவனின் கொலையில் 19 வயதான கோபி என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதிலிருந்து சிறுவனை குற்றவாளி பாலியல் வன்கொடுமை செய்து அடித்து கொன்றது தெரிய வந்தது. இதைதொடர்ந்து போலீஸார் கோபியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தன. குற்றவாளி கோபி போலீஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில், தான் சிறுவனை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதேபோல் இன்னொறு சிறுவனையும் கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளான். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் மற்றொரு சிறுவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் தெரிவித்த தகவலில், குற்றம்சாட்டப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் இவர் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவர் எனவும் தெரிவித்தனார். இதனால், அவரை வெளிவர முடியாத சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் செய்து வருகிறோம் என தெரிவித்தனர்.







