தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் கொரோனா பற்றிய பாடங்களை அறிமுகம் செய்கிறது.
இந்தியாவில் 2020 மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு, இரண்டு அலைகளாக தனது கோரதாண்டவத்தை நிகழ்த்தியது. 3வது அலை வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அதனை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் “கோவிட் -19 பற்றிய விழிப்புணர்வு & தற்காப்பு” என்ற பெயரில் இரண்டு புதிய சான்றிதழ் படிப்புகளை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிமுகம் செய்கிறது. கொரோனா படிப்புக்கான பாடத்திட்டத்தை வடிவமைக்கவும், வகுப்புகள் நடத்தவும் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன், திறந்தநிலை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கொரோனா சான்றிதழ் படிப்புகளில் சேரலாம் என்று திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். 1 மற்றும் 4 மாத காலம் என இரண்டு வகையாக சான்றிதழ் படிப்புகளின் காலம் இருக்கும். கொரோனாவுக்கு சிகிச்சை வழங்குதல், நோயாளிகளை பராமரித்தல் தொடர்பாக செவிலியர்களுக்கு பயிற்சி வழங்க மேலும் 10 சான்றிதழ் படிப்புகளையும் அறிமுகம் செய்யவுள்ளது தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்.








