கொரோனோ பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை முதல் நடைமுறைக்கு வந்தன.
அதன்படி அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிக பட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.பயணியர் ரயில், மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசுப் பேருந்துகள் மற்றும் வாடகை டாக்சி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம் எனவும், மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் எந்தத் தடையுமின்றி நடைபெறலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டுமே வழங்க வேண்டும்; தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வல நிகழ்ச்சிகளில் 20 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







