பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சென்னை கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி கடந்த 13ஆம் தேதி டிஜிபி திரிபாதி உத்தவிட்டார். இந்நிலையில், சிவசங்கர் பாபா, டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து அவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் டேராடூன் விரைந்தனர்.
இதனை முன்கூட்டியே அறிந்த சிவசங்கர் பாபா, மருத்துவமனையிலிருந்து தப்பினார். இதையடுத்து டெல்லியில் அவரை, போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை சாகேத் மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
இந்த நிலையில் சுஷில் ஹரி பள்ளியிலும் சிபிசிஐடி போலீசார் மூன்று மணி நேரத்திற்கு மேல் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் சுஷில் ஹரி பள்ளியை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.







