வண்டலூர் உயிரியல் பூங்காவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஆண் சிங்கம் இன்று உயிரிழந் துள்ளது.
நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்று பலத்த பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவி வரும் இந்த தொற்று விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏப்ரல் மாதம் 20- ஆம் தேதி முதல் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மே மாதம் 26-ஆம் தேதி வண்டலூரில் பூங்காவிலுள்ள சிங்கங்களுக்கு தொடர் இருமல் இருப்பது தெரியவந்ததை அடுத்து தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத் துவ குழுவினர்கள், சிங்கங்களின் சளி மாதிரிகளை சேகரித்து போபாலுக்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அப்போது, சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீலா என்ற பெண் சிங்கம் இறந்தது. இப்போது, ஆண் சிங்கம் ஒன்று உயிரிழந்துள்ளது. இதுகுறித்து வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பூங்காவில் சிங்க உலாவிடம் பகுதியில் 12 வயதுள்ள பத்மநாபன் என்ற ஆண் சிங்கம் 16 ஆம் தேதியன்று காலை 10 மணியளவில் இறந்தது.
இந்த சிங்கத்தின் மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டதில், அந்நிறுவனத்தின் அறிக்கையில் அந்த சிங்கத்துக்கு தொற்று உள்ளது என தெரியவந்ததைத் தொடர்ந்து, தீவீர சிகிச்சையில் இருந்து வந்தது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.







