15 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றது முதல் நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அண்மையில் மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தற்போது மேலும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். தொழில் முனைவோர் வளர்ச்சி வாரிய இயக்குநராக இருக்கும் கூடுதல் தலைமைச் செயலாளர் விபு நாயருக்கு, சிறப்பு செயலாக்கத் துறையின் நிர்வாகச் செயலாளராக கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
IAMWARM திட்ட இயக்குனர் மங்கத்ராம் சர்மாவுக்கு சமூக சீர்திருத்தத் துறை நிர்வாகச் செயலாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் சந்திரகாந்த் காம்ளேவுக்கு நில சீர்திருத்தத் துறை ஆணையர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த கண்ணன் , இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் இணை ஆணையராக இருந்த சங்கர் லால் குமாவட், வணிகவரித்துறையின் இணை ஆணையராகவும், முன்னாள் சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.







