முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆசிரியர் முதல் சபாநாயகர் வரை: யார் இந்த அப்பாவு?

ஒரு ஆசிரியராக இருந்து சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியில் சிறந்து சபாநாயகராக அவதாரம் எடுத்திருக்கிறார் அப்பாவு… யார் இந்த அப்பாவு.. இவரது பின்னணி என்ன?

தாம் இருக்கும் இடத்துக்கு ஏற்ப மாற்றி பேசும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், எந்த கட்சியில் இருந்தாலும், நாம் மக்களுக்காக என்ன செய்கிறோம் என்பதே முக்கியம் என்று, வெளிப்படையாக பேசும் வெள்ளந்தி மனிதர் தான் அப்பாவு.

பள்ளி ஆசிரியராக மாணவர்களை ஒழுங்குடன் வழிநடத்தியவர், இப்போது தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையை வழி நடத்தப் போகிறார்.

அப்பாவுக்கு அரசியல் ஏதோ இடையில் வந்து ஒட்டிக்கொண்ட ஒன்றல்ல. அது அவரது ரத்தத்திலேயே இருப்பது. நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர் அப்பாவு.

மகன் அரசுப்பணிக்கு செல்ல வேண்டும் என்ற பெற்றோரின் ஆசையை நிறைவேற்றி ஆசிரியர் பணியில் அமர்ந்தவரை, மக்கள் பணியில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்ற அவரது விருப்பம் ஆசிரியராக தொடர விடவில்லை.

மாசற்ற மனதுடன் மக்களை நேசிக்க அப்பாவு என்றொருவர் இருக்கிறார் என்பதே, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உதயமான போதுதான் தமிழகத்துக்கே தெரியவந்தது.

காங்கிரஸில் இருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸை மூப்பனார் ஆரம்பித்த போது, அவருடன் நின்றவர்களில் அப்பாவும் ஒருவர்.

திமுக கூட்டணியில் 1996-ல் தமாகா சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்றம் சென்றவர், 2001-ல் சுயேட்சையாக போட்டியிட்டு ராதாபுரம் தொகுதியில் மக்களிடையே தமக்கிருந்த செல்வாக்கை நிரூபித்தார்.

2006-ல் திமுக வேட்பாளராக களமிறங்கி சட்டமன்றத்துக்கு சென்ற அப்பாவு,
2011 தேர்தலில் கூட்டணி கட்சிக்கு ராதாபுரம் தொகுதியை திமுக ஒதுக்கியதால் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்தார்.

2016-ல் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம், 49 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார் அப்பாவு. அப்போது அவர் வாக்கு எண்ணும் மையத்தில், மறுவாக்கு எண்ணிக்கை கோரி போராட்டம் நடத்திய அப்பாவுவை, துணை ராணுவப் படையினர் குண்டு கட்டாக வெளியேற்றினர். அவர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு நிலுவையில் இருக்கிறது. ஆனால் அண்மையில் முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் இன்பதுரையை 5 ஆயிரத்து 925 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அப்பாவு.

இதன் மூலம் நீதிமன்றம் வழங்காத தீர்ப்பை, மக்கள் மன்றத்தில் பெற்ற அப்பாவு, சபாநாயகராக உயர்ந்திருக்கிறார். பேரவையில் இனி அவரின் தீர்ப்பு தான்.

எளிய மக்களின் பிரதிநிதியாகவே தன்னை எப்போதும் காட்டிக்கொள்ளும் அப்பாவு ஆசிரியராக இருந்த போதும், அரசியல் பிரதிநிதியாக தற்போது இருக்கும் போதும், மக்களில் ஒருவராகவே வலம் வந்தார்.

விவசாயிகள் பிரச்னை, தாமிரபரணி ஆற்று நீரை தனியார் குளிர்பான நிறுவனங்கள் எடுத்து வணிக நோக்கத்துக்காக பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை எதிர்த்து நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி நீதி கோரியது என, மக்களுக்காக இவர் முன்னெடுத்த போராட்டங்கள் ஏராளம். வணிக தேவைகளை விட மக்களின் தேவையே முக்கியம் என தான் கொண்ட கொள்கையில் உறுதியுடன் நின்ற அப்பாவு, தனக்கு சரியென பட்டதை சட்டென பதிவு செய்யும் திறனாளர்.

மக்கள் நலனில் அக்கறையும், மாசற்ற சிந்தனையும் கொண்ட அப்பாவு தற்போது, சட்டப்பேரவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அனைவரின் நலனும் அவசியம் என்ற ஒற்றை சிந்தனையுடன் தொலைக்காட்சிகளில் விவாதங்களில் தன் குரலை ஆழப்பதிவு செய்தவர், சட்டப்பேரவை தலைவராகவும் தன் பணியை சிறப்புடன் செயல்படுத்துவார் என்றே நம்பலாம்.

செய்திப்பிரிவு, நியூஸ் 7 தமிழ்

Advertisement:
SHARE

Related posts

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நிலவரம்!

Vandhana

போலி ஐடி கொடுத்து தடுப்பூசி செலுத்தினாரா? சர்ச்சைக்கு பிரபல நடிகை விளக்கம்!

Halley Karthik

கணவனை மீட்டுத்தரக்கோரி மனைவி காவல் நிலையத்தில் புகார்!

Niruban Chakkaaravarthi