இந்தியாவின் வளர்ச்சிக்கு திருப்பூர் ஒரு முன்மாதிரி-மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

இந்தியாவின் வளர்ச்சிக்கு திருப்பூர் ஒரு முன்மாதிரி மாவட்டமாக திகழ்ந்து வருவதாகவும் கடந்த 37 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 23 சதவீதம் தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். கோவை…

இந்தியாவின் வளர்ச்சிக்கு திருப்பூர் ஒரு முன்மாதிரி மாவட்டமாக திகழ்ந்து
வருவதாகவும் கடந்த 37 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 23 சதவீதம் தொழில்
வளர்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட
மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று திருப்பூர் மாவட்டத்தில்
புதிய திருப்பூர் பகுதியில் அமைந்துள்ள நேதாஜி அப்பேரல் பார்க்கில் உள்ள
தொழில் நிறுவனங்களை பார்வையிட்டு அங்குள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழில்
துறையினருடன் கலந்துரையாடினார். பின்னர் அவிநாசி சாலையில் உள்ள தனியார்
விடுதியில் தொழில்துறையினர் உடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார்

இந்நிகழ்வில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர். அப்போது தொழில் துறையினர் மத்தியில் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:

1985ஆம் ஆண்டில் 15 கோடிக்கு ஏற்றுமதி செய்த திருப்பூர் 2022 ல் 30000 கோடி ருபாய் அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. 37 வருடத்தில் வருடத்திற்கு 23 சதவிதம் தொழில் வளர்ச்சி பெற்றிருக்கிறது. எந்த நாட்டிலும் பார்க்க இயலாத வளர்ச்சியாக நான் கருதுகிறேன்.

நாட்டிற்கே திருப்பூர் முன்மாதிரியாக இருக்கிறது. 75 ஆவது சுதந்திர ஆண்டை
கொண்டாடும் நாம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 75 திருப்பூர் தொழில்நகரை
உருவாக்க உறுதியேற்போம். ஒவ்வொரு பகுதியிலிருந்தும் 50 ஆயிரம் கோடி
உற்பத்தியை உருவாக்குவோம். அதன் மூலம் 30 ஆண்டில் 30 டிரில்லியன் கோடி இலக்கை
நாம் எட்ட முடியும் என நம்புகிறேன். நாடு வளர்ச்சியடையவில்லை என குற்றம்
சாட்டுபவர்கள் திருப்பூர் வந்து பார்த்தாலே தெரியும், நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று.

திருப்பூர் தொழில்துறையினர் தொழிலாளர் பற்றாக்குறை இருப்பதாக
தெரிவித்தனர். வெளி மாநிலம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து
தொழிலாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு பயிற்சி வழங்க மத்திய அரசு துணையாக இருக்கும். பிரதமர் மோடி தொழிலாளர்களுக்கு மருந்துகள் எளிதில் கிடைக்க
வேண்டும் என அனைத்து பகுதிகளிலும் மத்திய அரசின் மலிவு விலை மருந்தகங்களை
உருவாக்கி உள்ளார்.

இதுபோல் தொழிலாளர்களுக்கும் தொழில் துறைக்கும் எண்ணற்ற உதவிகள் செய்து வருகிறோம். அரசு வேலை மற்றும் பொதுத்துறை வேலைகளுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களை மாற்றி தொழில் முனைவோர்களாக மாற்ற நாம் முயற்சி கொள்ள வேண்டும். பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் உலகிலேயே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்து வருகிறது. வளர்ந்த நாடுகளை காட்டிலும் இந்தியாவில் பொருள்களின் விலை அதிகரிக்காமல் பிரதமர் மோடி பார்த்துக் கொண்டார் என்றார் பியூஷ் கோயல்.

இந்நிகழ்வில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “இதுவரை ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் எந்த முகாந்திரமும் கொண்டதில்லை. ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில் சேவை, நல்ல நிர்வாகம், ஏழைகளின் நலன் ஆகிய குறிக்கோள்களை கொண்ட ஆற்றல் மிகுந்த தேசமாக உருவாக்கி உள்ளார்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.