ஜோ பைடனின் பலவீனத்தாலும், திறமையற்ற நிர்வாகத்தாலும் மூன்றாவது உலக போர் மூளுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதென முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் டெக்ஸாஸ் மாகானத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பைடனின் திறமையற்ற, பலவீனமான நிர்வாகத்தால் மூன்றாவது உலகப் போர் மூளக்கூடிய வாய்ப்பு அதிகம் இருப்பதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற பிறகு, வட கொரியா அதிகப்படியான ஏவுகணைகள் ஏவி தனது திறமையை சர்வதேச அளவில் நிரூபிக்க முயன்று வருகிறது. ஆனால் அப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றுவதில் பைடனின் நிர்வாகம் சரியான முறையை செயல்படுத்தவில்லை என்றார்.
மேலும் வெள்ளை மாளிகையில் இருக்கும் அதிபர், மெக்சிகோ – அமெரிக்க எல்லையில் சட்டவிரோதமாக குடிபெயருபவர்களை முதலில் தடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஐரோப்பா மீது கவனம் செலுத்த தேவையில்லை. கிழக்கு ஐரோப்பாவிற்கு அமெரிக்க வீரர்களை அனுப்பவதற்கு முன்பாக டெக்சாஸ் பகுதியில் நிலவும் பதற்றமான சூழலை கட்டுப்படுத்த வேண்டும். நான் மட்டும் இப்போது வெள்ளை மாளிகையில் அதிபராக இருந்திருந்தால் உக்ரைன் பிரச்னையே ஏற்பட்டிருக்காது என்றும் குறிப்பிட்டார்.








