மக்களவை பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரை தொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தமானது அமெரிக்காவுக்கு சாதகமாக இருப்பதாக கூறியும் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காத்தை கண்டித்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து மக்களவையில் அத்துமீறி நடந்துகொண்டதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் நடப்பு தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர பியூஸ் கோயல் இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.
அவர் பேசியதாவது ; இந்தியா அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளின் உறவில் சுமூகமான நல்லுறவை மேற்கொள்வதற்காக தான் மிக முக்கியமான நடவடிக்கைகளில் இறங்கினார்கள். இந்திய நாட்டு மக்களின் அனைத்து நலன்களும் கவனத்தில் கொண்டு தான் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை என்பது நடத்தப்பட்டது.
இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே பிப்ரவரி 2ம் தேதி நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் பல முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த உரையாடலை தொடர்ந்து அமெரிக்காவிற்கு வரும் இந்திய பொருள்களுக்கான வரியை 18 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குறைத்துக் கொண்டார். பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்த வரி குறைவு. இதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும்.
குறிப்பாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படக்கூடிய பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்க கூடிய நேரத்தில் அது இந்தியாவின் வளர்ச்சியை அதிகரிக்கும். வேளாண் துறையில் ஏற்பட்டுள்ள அமெரிக்க – இந்திய ஒப்பந்தம் புதிய தொழில் துறைகளை உருவாக்க வழிவகுக்கும்.
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் இந்தியா இரு நாடுகளும் செயலாற்றி கொண்டுள்ளனர். இந்தியா அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து கிடைக்க பெறும் கருத்துக்கள் அடிப்படையில் அது பகுப்பாய்வு செய்யப்பட்டு இறுதி உடன்படிக்கை வெளியிடப்படும். எரிசக்தி ,அணுசக்தி, விமான போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் நமது திறனை விரிவுபடுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள வர்த்தக வாய்ப்புகளை கவனமாக பயன்படுத்துவதால் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்து இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும். பிரதமர் இந்திய மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு விவகாரங்களில் செயல்பட்டு வருகிறார்.







