குழந்தையை விற்று காணாமல் போனதாக நாடகமாடிய பெண் உட்பட மூவர் கைது

திருச்சி லால்குடி அருகே குடும்பம் தாண்டிய  உறவில் பிறந்த குழந்தையை விற்பனை செய்ததோடு குழந்தையை கண்டுபிடித்து தாருங்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்து நாடகமாடிய தாயையும் , குழந்தையை விற்பனை செய்ய…

திருச்சி லால்குடி அருகே குடும்பம் தாண்டிய  உறவில் பிறந்த குழந்தையை விற்பனை செய்ததோடு குழந்தையை கண்டுபிடித்து தாருங்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்து நாடகமாடிய தாயையும் , குழந்தையை விற்பனை செய்ய உதவிய மூன்று பேரை அதிரடியாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த மங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் ஜானகி
என்பவருக்கும் லால்குடியை சேர்ந்த வழக்கறிஞர் பிரபு என்பவருக்கும் ஏற்பட்ட
பழக்கத்தில் ஜானகி கற்பமானார். இந்நிலையில் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் திகைத்த ஜானகி இது குறித்து பிரபு மற்றும் பிரபுவின் இரண்டாவது மனைவி சண்முகவள்ளி ஆகியோரிடம் ஆலோசனை கேட்டுள்ளார் . ஒரு கட்டத்தில் கருவை கலைக்க வேண்டாம் குழந்தை பிறந்த பிறகு அதனை விற்று விடலாம் என்கிற முடிவுக்கு மூன்று பேரும் வந்துள்ளனர்.

இதனை அடுத்து பிறந்த பெண் குழந்தையை, வழக்கறிஞர்  பிரபு மணக்கால் சூசைபுரம் பகுதியை சேர்ந்த ஓட்டுனர் ஆகாஷ் என்பவர் மூலம் வேறொரு நபருக்கு 3.50 லட்சம் ரூபாய்க்கு கடந்த சில மாதத்திற்கு முன்பாக விற்றுள்ளார். அதன் பிறகு ஜானகியிடம் அந்த  குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும் 20 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு உனக்கு 80 ஆயிரம் தருவதாக கூறி பிரபு வழங்கியுள்ளார். ஜானகி தனக்கு கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு நகை போன்ற பொருட்களை வாங்கிக்கொண்டார்.

சில நாட்களுக்குப் பிறகு குழந்தையை 3.50 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது என்கிற தகவல் ஜானகிக்கு தெரிய வந்ததும் தனது குழந்தை காணாமல் போனதாகவும் அதனை கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றனை கொடுத்தார்.

இதனை அடுத்து லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் காவல்துறையினர் இதனை தீவிரமாக விசாரணை செய்த போது ஜானகி நாடகம் ஆடியது தெரியவந்தது எனவே ஜானகியை காவல்துறையினர்  ஏற்கனவே கைது செய்தனர். மேலும் ஜானகியிடம் முழுமையாக விசாரணை செய்து  கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வழக்கறிஞர் பிரபு மற்றும் அவரது 2வது மனைவி சண்முகவள்ளி மற்றும் குழந்தையை விற்க இடைத்தரகராக செயல்பட்டு வந்த ஆகாஷ் உள்ளிட்டோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர் . இந்நிலையில் காவல்துறையினர் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வரும் இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.