டெல்லியில் 17 வயது சிறுமி மீது ஆசிட் வீசிய இளைஞர்களை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
டெல்லி, தெற்கு துவாரகா பகுதியில் 17 வயது பள்ளி மாணவி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், சிறுமி மீது ஆசிட் வீசினர். இதில் மாணவியின் முகம், கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாணவியின் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, ஆசிட் வீசிய இருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர், சிறுமி மீது ஆசிட் வீசியவர்களை பொதுவெளியில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெறும் வார்த்தைகளால் எந்த நீதியையும் நம்மால் வழங்க முடியாது. இந்த மிருகங்களுக்கு அளவிட முடியாத வலியைப் பற்றிய பயத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். துவாரகாவில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய இளைஞர்களை பொதுவெளியில் பகிரங்கமாக அதிகாரிகள் தூக்கிலிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.