கத்தாரில் நடைபெற்றுவரும் உலககோப்பை கால்பந்து போட்டி தான், தன்னுடைய கடைசி உலககோப்பை போட்டி என அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
22வது உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டி லுசைல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த அரையிறுதி போட்டியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 6வது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்து அசத்தியது. உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களுள் ஒருவராக கருதப்படும் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, இந்த அரையிறுதி ஆட்டத்தில் அடித்த கோல் மூலம், தனது அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதுவரை அர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸி, 11 கோல்கள் அடித்துள்ளார்.
இந்நிலையில் ஃபிஃபா உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியோடு, கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக லியோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார். நீண்ட நாட்களாக அவரது ஓய்வு குறித்து பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், இன்று மெஸ்ஸி தனது ஓய்வை உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ”எனது உலகக் கோப்பை பயணத்தை, இந்த தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடியவுடன் முடித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்த தொடர் வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும். அதில் என்னால் கலந்து கொள்ள முடியாது என்று நினைக்கிறேன். இந்த தொடரோடு முடித்துக் கொள்வதே சிறந்தது” என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் லட்சகணக்கான ரசிகர்களை கொண்டுள்ள கால்பந்து வீரர் மெஸ்ஸி, சாதாரண ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர். உடல் வளர்ச்சி குறைபாடு காரணமாக, பல இன்னல்களை சந்தித்த மெஸ்ஸி, தன்னுடைய விடா முயற்சியால், கால்பந்து விளையாட்டில் நட்சத்திர வீரராக உயர்ந்தவர். இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடர், மெஸ்ஸியின் 5வது உலகக் கோப்பை தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.