விஜயதரணி பாஜகவில் இணைந்த நிலையில், “அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது” என ராகுல் காந்தி எம்.பி பேசிய பழைய வீடியோ ஒன்றை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல் வெளியாகி வந்தது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதரணி பாஜகவில் இணைந்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சியில் பெண்கள் தலைமை இடத்துக்கு வரமுடியாத சூழல் இருப்பதாகவும், இந்த அதிருப்தியில் தான் அக்கட்சியை விட்டு வெளியேறிதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் பழைய வீடியோ ஒன்றை காங்கிரஸ் கமிட்டி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில், “எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது. பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள். உங்களுக்கு RSS தான் சரியான இடம்” என பதிவிடப்பட்டுள்ளது.
https://twitter.com/INCTamilNadu/status/1761337011284099217?t=y34Bh8TykRDhV3f9RQa08A&s=08







