நீட் இதற்காகத்தான் கொண்டுவரப்பட்டது; ஆளுநர் முன் குற்றம்சாட்டிய அமைச்சர்

நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளையடிக்க கொண்டு வரப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டினார். சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. இந்த…

நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளையடிக்க கொண்டு வரப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டினார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கி வாழ்த்தினர்.

மேடையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் தான் நமது முதலமைச்சர் என குறிப்பிட்டார். மேலும், ‘கல்வியும் சுகாதாரமும் தனது 2 கண்கள் என கருதுபவரே நம்முடைய முதலமைச்சர்’ என புகழாரம் சூட்டிய அவர், நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளையடிக்க கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். அப்போது, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மேடையில் குறிப்பிட்டார்.

அண்மைச் செய்தி: ‘பப்ஜிக்கு அடிமையாகி தூக்கு மாட்டி உயிரிழப்பு செய்து கொண்ட கல்லூரி மாணவன்’

பெண் கல்வி உயர வேண்டும் என்பதால், தான் அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கொண்டு வந்துள்ளார் நமது முதலமைச்சர் என தெரிவித்த அமைச்சர் பொன்முடி, இதற்கு பெயர் தான் ‘திராவிட மாடல்’ என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் கல்வி சிறப்பாக இருப்பதாக நமது ஆளுநரே சொல்லியிருக்கிறார், அது உண்மை என தெரிவித்தார்.

அவரைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “கையில் பட்டத்துடனும் கண்களில் கனவுகளுடனும் எதிர்காலத்தை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்களுக்கு எனது வாழ்த்துகள். உலகின் பல்வேறு வளர்ச்சிக்கு காரணமானவர்களை உருவாக்கியது சென்னை பல்கலைக்கழகம். தமிழக மக்களால் முதலமைச்சராக்கப்பட்ட நான், அனைத்தும் மாணவர்களையும் முதல்வனாக்க கொண்டுவந்த திட்டம் தான், நான் முதல்வன் திட்டம்” என்று குறிப்பிட்டார்.

ஏழை, எளிய, விளிம்பு நிலை மாணவர்கள் பயிற்சி பெற ஏராளமான திட்டங்களை நமது அரசு தீட்டியுள்ளது. தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு வேலை இல்லை என எந்த நிறுவனமும் சொல்லக்கூடாது என்று குறிப்பிட்ட முதலமைச்சர், அதற்காகத்தான், தமிழ்நாடு அரசு பல திட்டங்களை தீட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், “இது உங்கள் அரசு, மக்களுக்கான அரசு, மாணவர்களுக்கான அரசு என சொல்வதில் பெருமைப்படுகிறேன். பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தரும் கல்வி தான் உண்மையான சொத்து. எனது ஆட்சிக் காலம் உயர்கல்வியில் பொற்காலமாக ஆக வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்” என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.