சென்னை விமானநிலையத்தில் பயணிகளை சோதனை செய்தபோது, தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அரிய வகை வெள்ளை முள்ளம் பன்றி மற்றும் டாமரின் குரங்கு ஆகியவற்றை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளையும் உடமைகளையும் சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த ஒரு இளைஞரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதிர்ச்சியடைந்தனர். அதில், அட்டைப்பெட்டி மற்றும் துணியால் செய்யப்பட்ட கூடைக்குள் வெள்ளை நிற முள்ளம்பன்றி, மற்றும் டாமரின் மங்கி எனப்படும் வெளிநாட்டு குரங்கு குட்டி இருந்தது.
இதை கண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அந்த இளைஞரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது, வெளிநாட்டில் இருந்து வளர்ப்பதற்காக வாங்கி வருவதாக கூறினார். ஆனால் அவரிடம் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை. மேலும் வெளிநாட்டில் இருந்து வனவிலங்கு போன்ற உயிரினங்களை வாங்கி வரும்போது சர்வதேச வன விலங்கு பாதுகாப்பு துறையிடம் தெரிவித்து, இந்திய வனவிலங்குப் பாதுகாப்பு துறைக்கும் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். அந்த உயிரினங்களில் நோய்க்கிருமிகள் எதுவும் இல்லை என்ற மருத்துவ பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். ஆனால் அவரிடம் எதற்கான சான்றிதழும் இல்லை.
இதையடுத்து, சுங்க இலாகா அதிகாரிகள் வெள்ளை முள்ளம் பன்றி, குரங்கு குட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இது குறித்து சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவுக்கும் தகவல் கொடுத்தனர். முறையான மருத்துவ பரிசோதனை இல்லாமல் வந்துள்ளதால் இந்த விலங்குகள் மூலம் வெளிநாட்டு நோய்க் கிருமிகள் நம் நாட்டு விலங்குகளுக்கும் பரவும் ஆபத்து இருப்பதால், இதை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்புவது சரியாக இருக்கும் என அதிகாரிகள் கூறினா். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








