ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி அதிகரித்ததை தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.1 சதவீதம் எஸ்.பி.ஐ. வங்கி உயர்த்தியது.
குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதமான ரெப்போ ரேட்டை 0.40 சதவீதம் உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இம்மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தார். இதன் காரணமாக வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கடன்களுக்கான வட்டியும் உயரும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், நாட்டிலேயே மிகப் பெரிய பொதுத் துறை வங்கியும், அதிக கடனுதவியை வாடிக்கையாளர்களுக்கு அளித்துவரும் வங்கியுமான எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களின் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.1 சதவீதம் உயர்த்தியுள்ளது.
இதையடுத்து, வாடிக்கையாளர்கள் பெற்ற கடனுக்கான இ.எம்.ஐ.யும் அதிகரிக்கவுள்ளது.
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக வட்டி விகிதத்தை எஸ்.பி.ஐ. உயர்த்தியுள்ளது. இதேபோல், மேலும் சில வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்திவிட்டன.
பிற வங்கிகளும் அடுத்த சில தினங்களில் வாடிக்கையாளர்களின் கடன்களுக்கான வட்டியை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் மே 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது என்று எஸ்.பி.ஐ. இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







