திருவண்ணாமலை-ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் மலை மீது சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார் 500லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் அழித்தனர். மேலும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு அருகே இருவேறு சம்பவங்களில் கள்ளச்சாராயம் அருந்திய 21 பேர் உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு வேட்டைகளில் போலீசார் அதிரடியாக இறங்கியுள்ளனர். அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் ஏழு சிறப்பு படைகள அமைக்கப்பட்டு கள்ளச்சாரயத்தை ஒழிக்கும் பணியில் அதிரடியாக இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான மோகனாவரம் மலைப்பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மலை மீது ரகசியமாக கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட ஆற்காட்டை சேர்ந்த சுரேஷ் மற்றும் நாயக்கம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 500லிட்டர் கள்ளசாராயத்தை பறிமுதல் செய்து மலையிலிருந்து ஊற்றி அழித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கள்ளச்சாராயம் விற்பனை செய்த இருவரை கைது செய்த ஆரணி கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் புகழ் மற்றும் உதவி ஆய்வாளர் ஷாபுதீன் தலைமையிலான போலீசாரை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.
-வேந்தன்
.







