நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து ஓராண்டு ஆகியும் பொறியாளர் அலட்சியத்தால் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறவில்லை என ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பத்தூர் வெலக்கல் நத்தம் அடுத்த செட்டேரி டேம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 20 ஆண்டு காலமாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இது குறித்த செய்தி நியூஸ் 7 தமிழில் வெளியானது. இதனையடுத்து கடந்த ஆண்டு புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசுக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் கட்டுமான பணிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அரசு தொடக்கப்பள்ளி கட்டடப்பணி ஒரு வருட காலமாக நடைபெற்ற நிலையில், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி புரியும் பொறியாளர் சேகர் நடவடிக்கையால் கட்டிட பணி நிறைவு பெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
அவருக்கு போதிய கமிஷன் வழங்கப்படவில்லை என்று கூறி பணிகள் தொடர விடாமல் தடுப்பதாக கூறப்படுகிறது. வரும் 7 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் நிலையில், பொறியாளரின் அலட்சிய போக்கினால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.
வாடகை கட்டத்தில் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த தொடக்கப்பள்ளியை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்தும் அதனை செயல்படுத்தாமல் பொறியாளர் காலம் தாழ்த்தி வருவதாக கட்டடப்பணி ஒப்பந்ததாரர் குற்றச்சாட்டி வருகின்றார்.
இந்நிலையில், கட்டிடம் கட்டும் ஒப்பந்ததாரர்கள் கட்டிடத்திற்கான போதிய கமிஷன் கொடுத்தால் மட்டுமே கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படுவதாகவும், கடந்த ஒரு ஆண்டு காலமாக பல்வேறு அரசு கட்டிடப் பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் பாதியிலேயே பணிகள் தடை செய்யப்பட்டு வருவதாகவும், ஒன்றிய பொறியாளர் சேகருக்கு கமிஷன் வழங்கிங்கினால் மட்டுமே கட்டிடம் பணிகள் முழுமை பெறும் என்று ஒப்பந்ததாரரிடம் மிரட்டல் விடுப்பு வருவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, அரசு பள்ளி கட்டிட பணியை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கையை துறை ரீதியான அதிகாரிகள் எடுக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்கள் கேட்டுக்கொண்டனர்.
—-சௌம்யா.மோ








