உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான Nvidia நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமிக்கப்பட்டுள்ளார். திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள், அதில் சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடனான தொடர்பு உள்ளிட்ட சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலகியிருந்தார்.
இந்நிலையில், நவம்பர் 23 – திங்கள்கிழமை நடைபெற்ற இயக்குநர் குழுக் கூட்டத்தில், ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்க ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. தொடர் ஆலோசனைகள் மற்றும் சந்திப்புகளுக்குப் பிறகு அவரது நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நிறுவனத்தை வழிநடத்தும் திறன் ஆகியவற்றில் இயக்குநர் குழு திருப்தி அடைந்ததாக Nvidia தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மீண்டும் பொறுப்பேற்றது குறித்து ஜென்சன் ஹுவாங் கருத்து!
63 வயதான ஜென்சன் ஹுவாங், மீண்டும் Nvidia நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்பதில் பெருமையடைவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தன் மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் குழு உறுப்பினர்களுக்கும் நிறுவன ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான Nvidia-வை, புதிய தொழில்துறை புரட்சியின் தொடக்கத்தில் மீண்டும் வழிநடத்துவதில் பெருமையடைகிறேன். இந்தப் பொறுப்பை மிகுந்த பணிவுடனும் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடனும் ஏற்றுக்கொள்கிறேன். இந்தச் செயல்முறை முழுவதும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கும், ஆலோசனைகளை மேற்கொண்டதற்கும் Nvidia இயக்குநர் குழுவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, ஜென்சன் ஹுவாங் வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பின் இலக்காக இருந்தாரா என்பது குறித்து விசாரிக்க, சுயாதீன இயக்குநர்களை மட்டுமே கொண்ட குழுவையும் Nvidia இயக்குநர் குழு அமைத்துள்ளது. இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க ஹுவாங் உறுதியளித்துள்ளார். மேலும், வர்த்தக விதிமுறைகள் மற்றும் தேசியப் பாதுகாப்பு அபாயங்களைக் கண்காணிக்க சுயாதீன இயக்குநர்களைக் கொண்ட தேசியப் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுக் குழுவையும் நிறுவனம் அமைத்துள்ளது.
ஜென்சன் ஹுவாங் மீண்டும் பொறுப்பேற்றதற்கு டிரம்ப் வரவேற்பு!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், ஜென்சன் ஹுவாங் மீண்டும் Nvidia நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்திருப்பதை வரவேற்றுள்ளார். அமெரிக்கப் பொருளாதாரத்தின் வெற்றி மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்த ஹுவாங்கின் தலைமைத்துவம் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது Truth Social பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், “ஜென்சன் மீண்டும் Nvidia நிறுவனத்திற்குத் திரும்புவது தேசியப் பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் என நம்புவதற்கு அமெரிக்க அரசிடம் எந்தக் காரணமும் இல்லை. அவர் சட்டவிரோதமான எந்தச் செயலிலும் ஈடுபட்டார் என்பதற்கான ஆதாரங்கள் அமெரிக்க அரசிடம் இல்லை என்பதை அமெரிக்க அட்டர்னி ஜெனரல் உறுதிப்படுத்தியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜென்சன் ஹுவாங்கை சிறந்த தேசபக்தர் என்றும், தேசியச் சொத்து என்றும் டிரம்ப் புகழ்ந்துள்ளார். அதேநேரத்தில், அமெரிக்காவின் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை Nvidia நிறுவனம் முறையாகப் பின்பற்றுகிறதா என்பது தொடர்பான உள்நாட்டு விசாரணையைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பதவி விலகலுக்குப் பின்னணி என்ன?
ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமிக்கப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் தொடர்பு உள்ளிட்ட திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து அவர் நவம்பர் 12ஆம் தேதி பதவி விலகினார். அவருக்கு ஆலிஸ் ஹுவாங் என்ற பெண்ணுடனும், Nvidia நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவின் துணைத் தலைவரான கிம்பர்லி பவலுடனும் தொடர்பு இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆலிஸ் ஹுவாங், சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட Megaspeed நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நிறுவனம் Nvidia நிறுவனத்திடமிருந்து பல பில்லியன் டாலர் மதிப்பிலான சிப்களை வாங்கியிருந்தது. அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள், ஆலிஸ் ஹுவாங் சீனாவுக்குத் தகவல்களை வழங்கியதாக முடிவு செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது.
இடைக்கால CEO-வாக நியமிக்கப்பட்டவர் யார்?
ஜென்சன் ஹுவாங் பதவி விலகியதைத் தொடர்ந்து, அவரை மீண்டும் கொண்டுவருவதற்கான கோரிக்கைகள் எழுந்தபோதிலும், Nvidia நிறுவனம் ஆரம்பத்தில் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து, நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான கோலெட் கிரெஸ் (Colette Kress) இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதேசமயம், நிரந்தர தலைமைச் செயல் அதிகாரியைத் தேர்வு செய்வதற்கான பணிகளையும் இயக்குநர் குழு தொடங்கியிருந்தது.
இந்த விவகாரம் அமெரிக்கா – சீனா இடையிலான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் போட்டியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் தரவு மையங்களில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட சிப்களை வழங்கும் முக்கிய நிறுவனமாக Nvidia விளங்குவது குறிப்பிடத்தக்கது.




