தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நவம்பரில் கிட்டதட்ட பொய்த்தே போனது. மழை குறைந்து அதிகாலை நேரங்களில் பரவலாக பனிபொழிவு காணப்படுகிறது. இந்த நிலையில், வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதைகள் காரணமாக அவ்வப்போது மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி!
தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மத்தியமேற்கு வங்கக்கடல் வரை சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) ஒன்று நிலவுகிறது. அதேபோல், வடக்கு கேரளாவில் இருந்து கர்நாடகா வரையிலான கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது.
இந்த வானிலை அமைப்புகளின் காரணமாக தமிழகத்தில் இன்று குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
இதன்காரணமாக, இன்று (நவம்பர் 23) இரவு 10 மணி வரை தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




