மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என கோரி மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளதாக குறிப்பிட்டு, மதுரை ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். தீபத்தூணில் கார்த்திகை தீபமும் ஏற்றவில்லை.
இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது சட்டம் ஒழுங்கு காரணமாகவே இந்த உத்தரவுகள் பிறக்கப்பட்டதாக மதுரை ஆட்சியர் நீதிமன்றத்தில் நிபந்தனையன்ற மன்னிப்பு கோரியிருந்தார். இருந்த போதிலும் இந்த வழக்கில் மதுரை மாவட்ட அரசு அதிகாரிகள் மீது பல்வேறு உத்தரவுகளை தனி நீதிபதி பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவுகளை எதிர்த்து மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோர் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தனர். நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வு முன்பு மீண்டும் இன்று (மார்ச்.17) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பான நீதிமன்ற உத்தரவு விபரங்களை அரசுத்தரப்பில் தாக்கல் செய்யவும், அதுவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும் நீதிபதிள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.







