எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதாவை தொடர்ந்து…. – முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் சங்கம் வாழ்த்து…!

தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

தமிழ் நாடு சட்டமன்றத்தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக காங்கிரஸ்,விசிக, சிபிஐ, சிபிஎம் ஐயு.எம்.எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை தொடர்ந்து பெரும்பான்மை பெற்றது.

இதனையடுத்து இன்று நடைபெற்ற விழாவில் தமிழ் நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். மேலும் செங்கோட்டையன், புஸ்ஸி ஆன்ந்த் உள்ளிட்ட 9 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது.

தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல்,முதலமைச்சர் விஜயின் தனிச்செயலளர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் செந்தில்குமார், லட்சுமிபிரியா நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ் நாடு நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள வாழ்த்தில் கூறப்பட்டுள்ளதாவது;

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வரலாற்றில் இன்று ஒரு புது அத்தியாயம். கிரீடத்தில் இன்னுமொரு வைரம் மக்கள் திலகம் எம்ஜிஆர், முத்தமிழ் அறிஞர் கலைஞர், செல்வி ஜெ ஜெயலலிதா, அவர்களைத் தொடர்ந்து நான்காம் உறுப்பினராக திரு. ஜோசப் விஜய் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்று கொண்டதில் தென்னிந்திய நடிகர் சங்கம் அளவிலா மகிழ்வும் பெருமிதமும் கொள்கிறது.

எடுத்துக்கொண்ட பொறுப்பினை நிறைவுற புகழ்பெற தென்னிந்திய நடிகர் சங்கம் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.