திருப்பரங்குன்றம் வழக்கு : நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய மதுரை மாவட்ட ஆட்சியர்..!

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று ராம ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் கார்த்திகை தீபத்திருந்தாள் தினத்தன்று, உச்சி பிள்ளையார் கோயிலும் மட்டும் தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து மனுதாரர் மதுரை மாவட்ட ஆட்சியர் , காவல் ஆணையர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஏற்கனவே தமிழ் நாடு தலைமை செயலாளர் முருகானந்தம், சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக ஆஜராகி விளக்கமளித்தனர்.

இந்நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன் மற்றும் திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் நாராயணன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.

இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறும் நோக்கம் இல்லை என்றும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.  மேலும், மதக் கலவரம் ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல் வந்ததாலேயே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.