திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கோடை மழை கொட்டி தீர்த்த நிலையில் ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள பால்வளத்துறை அலுவலகத்திற்குள் மழை நீர் புகுந்து கணிப்பொறி மற்றும் ஆவணங்கள் மழை நீரில் நனைந்து சேதமானது.
திருநெல்வேலி மாநகரில் காலை வழக்கம்போல் வெயில் சுட்டெரித்த நிலையில் பிற்பகல் 1 மணியளவில் மாநகரின் பல்வேறு பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி சந்திப்பு , டவுன், கொக்கிரகுளம் சமாதானபுரம் தச்சநல்லூர் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டியது.
சுமார் 40 நிமிடம் வரை மழை நீடித்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலத்த மழை காரணமாக வாகன ஓட்டிகள் மின்விளக்குகளை ஒளிரச் செய்தபடி சென்றனர் . குறிப்பாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பால்வளத்துறை அலுவலகத்திற்குள் மழை நீர் புகுந்து ஒன்றரை அடி உயரம் அளவிற்கு தண்ணீர் தேங்கியது.
அத்துடன் ஆவணங்கள் மற்றும் கணிப்பொறி மழை நீரில் நனைந்து சேதமானது.
தண்ணீர் செல்ல போதுமான வழி இல்லாத நிலையில் பால்வளத்துறை அலுவலகத்திற்குள்
தண்ணீர் புகுந்த நிலையில் அலுவலக ஊழியர்கள்மற்றும் அதிகாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தகவல் அறிந்து பால்வளத்துறை அலுவலகத்திற்கு வந்த தீயணைப்பு
மற்றும் மீட்பு படையினர் தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
—-ரெ.வீரம்மாதேவி







