சின்னர்ஸ், ஃபிராங்கன்ஸ்டைன், அவதார் 3, எஃப் 1 படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள்……..!

98-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

திரையுலகின் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருதுகள். இது அமெரிக்காவின் அகாதமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயின்சஸ் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 98-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் சின்னர்ஸ், ஃபிராங்கன்ஸ்டைன், அவதார், எஃப் ஒன் ஆகிய படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி விழாவின் முதல் விருதாக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை ‘வெப்பன்ஸ்’ (Weapons) படத்தில் நடித்த ஏமி மேடிகன் தட்டி சென்றார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சின்னர்ஸ் திரைப்படம் 4 ஆஸ்கார் விருதுகளை வென்று அசத்தியுள்ளது. அதன்படி சிறந்த நடிகர் விருது மைக்கேல் பி. ஜோர்டனுக்கும், சிறந்த அசல் திரைக்கதைக்கான விருது இயக்குநர் ரயான் கூக்ளருக்கும் வழங்கப்பட்டது. சிறந்த அசல் பாடல் பிரிவில் லுட்விக் கோரன்சன் ஆஸ்கர் விருதைப் பெற்றார். சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கர் விருதை ஆட்டம் டுரால்ட் அர்காபாவ் வென்றார்.

ஃபிராங்கன்ஸ்டைன் திரைப்படமானது தயாரிப்பு வடிவமைப்பு, ஒப்பனை – சிகை அலங்காரம் மற்றும் ஆடை வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

அவதார் : ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படமானது சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸிற்கான ஆஸ்கார் விருதை வென்றது. இந்த விருதை ஜோ லெட்டெரி, ரிச்சர்ட் பேன்ஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் ஆகியோர் பெற்றனர்.

பிரேட் பிட் நடிப்பில் வெளியான எஃப் 1 திரைப்படம் சிறந்த ஒலிக்கான பிரிவில் ஆஸ்கர் விருதை பெற்றது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.