திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகர் மீனவர்கள், தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி கடந்த நான்கு நாட்களாக நடத்திவந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகர் பகுதி மீனவர்கள், கடல் அரிப்பு ஏற்படுவதால் படகுகள் மற்றும் வலை பின்னும் கூடங்கள் மேலும் வீடுகள் சேதமாவதால் அரசு உடனடியாக தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்து கடந்த நான்கு நாட்களாக கடலுக்கு செல்லாமல் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து, இன்று மாலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் மீன்வளத்துறை அதிகாரிகள், காவல்துறையினர், அமலி நகர் மீனவ சங்கப் பிரதிநிதிகள், ஊர் கமிட்டியினர், பங்குத்தந்தை உள்ளிட்டவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அண்மைச் செய்தி:”உச்சநீதிமன்ற தீர்ப்பு வெற்றிப் பாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது” – எடப்பாடி பழனிசாமி பேட்டி
இந்தக் கூட்டத்தில், அமலி நகர் பகுதியில் தூண்டில் வளைவு மற்றும் தடுப்புச் சுவர் ஆகியவை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடற்கரை ஒழுங்காற்று முறை அறிவிப்பானை குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு விரைவில் முடிந்தவுடன் அமலி நகர் பகுதிக்கு தூண்டில் வளைவு மற்றும் தடுப்புச் சுவர் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்யப்படும் என ஆட்சியர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்கள் மாவட்ட ஆட்சியரின் உறுதியை தொடர்ந்து தாங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை விலக்கி கொள்வதாக அறிவித்தனர்.







