விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண
உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள்
கோயில் 108 வைணவத் தலங்களில் முக்கியமான தலமாகும். தமிழக அரசின்
முத்திரையாக இக்கோயிலின் ராஜகோபுரம் அமைந்திருக்கிறது.
மேலும், இந்த ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஆண்டுதோறும் பங்குனி
மாதம் உத்திர திருநாளில் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருக்கல்யாண
உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு, ஆண்டாள்
ரெங்கமன்னாருக்கு அதிகாலையில் சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம்
செய்தனர். இந்நிலையில், வேதங்கள் முழங்க பாலாஜி பட்டர் கொடிமரத்து
பட்டத்தை ஏற்றி வைத்தார்.
ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் சுவாமிகள் தினமும் காலையில் மண்டபம்
எழுந்தருளல் மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.
முக்கிய நிகழ்ச்சியான ஆண்டாள் திருக்கல்யாணம் , அடுத்த மாதம் ஏப்ரல் 05 ஆம்
தேதி புதன்கிழமை அன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக
அன்று காலை செப்பு தேரோட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெறும்.
மேலும், ஆண்டாள் ரங்க மன்னார் திருக்கல்யாண உற்சவத்தை காண்பதற்கு ,
உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை
தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய கொடியேற்ற விழாவில்
முக்கிய பிரமுகர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
——கு.பாலமுருகன்







