எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜகவை நிச்சயமாக வீழ்த்த முடியும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் கடந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் தொடங்கியது. நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ளிட்ட ஏறத்தாழ 3 ஆயிரத்து 970 கிலோ மீட்டர் பயணம் செய்த ராகுல் காந்தி, ஜனவரி 30ம் தேதி காஷ்மீரில் நடை பயணத்தை முடித்துக் கொண்டார்.
இந்திய ஒற்றுமைப் பயணத்தின் நிறைவிற்கு பிறகு இந்த ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து மோடியும், அதானியும் இருக்கும் புகைப் படங்களை காட்டி கேள்வி எழுப்பினர். இதன் பின்னர் நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இதனையும் படியுங்கள்: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!
இதனைத் தொடர்ந்து இத்தாலியின் தினசரி நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள ராகுல் காந்தி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜகவை நிச்சயமாக தோற்கடிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பேட்டியில் ராகுல் காந்தி தெரிவித்ததாவது..
”இந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு, பொருளாதார மந்தம், வறுமை, விவசாயிகள் விவகாரம் மற்றும் கொரோனாவிற்கு பிந்தைய நெருக்கடிகள் போன்றவற்றிலிருந்து ஊடகங்கள் மக்களை திசை திருப்பி வருகின்றன.
பாசிசம் ஏற்கனவே இங்கே இருக்கிறது. ஜனநாயக அடிப்படைகள் தகர்க்கப்பட்டுள்ளன, நாடாளுமன்றம் சரிவர நடைபெறவில்லை, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நாடாளுமன்றத்தில் எனக்கு பேச அனுமதிக்கப்படுவதில்லை. அப்படிபேசினாலும் எனது மைக்கை அணைத்து விடுகிறார்கள். ஊடகங்கள் சுதந்திரமாக இயங்க முடியவில்லை. நீதித்துறை தன்னிச்சையாக இயங்க முடியவில்லை.
இதனையும் படியுங்கள் : சிவசேனா சின்னம் விவகாரம்: உத்தவ் தாக்கரே மனு மீது நாளை விசாரணை
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் நூறு சதவிகிதம் தோற்கடிக்க முடியும். எதிர்க்கட்சிகளிடத்தில் ஒரு திட்டம் இருக்க வேண்டும். வலது இடது என்பதைத் தாண்டி அமைதி மற்றும் ஒற்றுமைக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். சரியான எதிர்க்கட்சிகளால் பாசிசத்தை நிச்சயமாக தோற்கடிக்க முடியும்.” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
– யாழன்







