மோடியை பெரியார் என்று காட்ட நினைக்கிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்தார்.
பெரியார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரது பிறந்த நாள் சமூகநீதி நாளாகக் கடந்த ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், அதனைத் தொடர்ந்து சமூக நீதி உறுதிமொழியும் ஏற்றார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “பெரியார், அம்பேத்கர் போன்ற மாமனிதர்கள் கண்ட கனவை நனவாக்குவதற்கும் இந்திய அரசியலமைப்பின் மாண்புகளை பாதுகாப்பதற்கும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தார்.
இன்னும் தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது என்று குறிப்பிட்ட அவர், சங்கரன்கோவில் அருகே பள்ளி மாணவர்கள் பெட்டி கடைகளில் மிட்டாய் வாங்க சென்றபோது அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதை சுட்டிக் காட்டினார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், திருவள்ளுவருக்கு காவி உடை பொருத்தியுள்ளனர், அம்பேத்கருக்கு காவியை பூச நினைக்கிறார்கள். மோடியை பெரியார் என்று காட்ட நினைக்கிறார்கள் இது வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும்தான் இருக்கும், தமிழ் மண்ணில் அவர்களின் எண்ணம் பலிக்காது. இங்கிருந்து அவர்கள் விரட்டப்படுவார்கள் எனவும் கூறினார்.







