நோய்வாய்பட்ட பெண்ணை 7 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதியின் வழியாக டோலி கட்டி தூக்கி சென்ற அவலம் மீண்டும் அரங்கேறியுள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஒரவம்பாடி மலை கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு இந்த பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள குறியர்குட்டி பாலம் முற்றிலுமாக ஆற்றில் அடித்து செல்லபட்டது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் மழை காலங்களில் ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடும் சமயங்களில் ஆற்றை கடக்க முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடங்கும் நிலை உள்ளது.
இந்த நிலையில், இந்த கிராமத்தை சேர்ந்த மணிகாளியம்மாள் என்ற மூதாட்டிக்கு தீடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. அதனால், இந்த பகுதி மக்கள் மூங்கிலால் ஆன டோலியினை தயார் செய்து அதில் மூதாட்டியை அமர வைத்து அங்குள்ள ஆற்றினை உயிரை பனையம் வைத்து கடந்துள்ளனர். மேலும் வனப்பகுதியின் வழியாக 7 கிலோ மீட்டர் தூரம் டோலியினால் தூக்கி சென்றுள்ளனர்.
வனப்பகுதியின் வழியாக செல்லும் போது அந்த பகுதியில் காட்டுயானை ஒன்று இவர்களை கடந்து சென்றுள்ளது. இதனால், அவர்கள் பீதியில் உறைந்து போன நிலையில் காட்டு யானை அவர்களை கடந்து சென்ற பின்னர் மீண்டும் டோலியினை தூக்கி கொண்டு சென்றனர். பிறகு, அல்லிமூப்பன் என்ற காலனி பகுதிக்கு வந்தடைந்து அங்கிருந்து ஜீப் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த பகுதியில் பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ரேசன் பொருள்களை கூட வாங்க முடியாமல் அவதி படுவதாகவும், கர்ப்பிணிகள் மற்றும் உடல் நலம் பாதிக்கபட்டவர்களை கடுமையான போராட்டத்திற்கு பின்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.







