முக்கியச் செய்திகள் இந்தியா

தமிழகத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் அதிகரிப்பு

சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் சதவீதம் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருப்பது புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் 18 வயதுக்கு கீழுள்ள சிறார்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களை கட்டுப்படுத்த கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டது. வன்புணர்வு, பாலியல் சீண்டல், தொழிநுட்பத்தை பயன்படுத்தி பாலியல் தொந்தரவு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களுக்கு தனித் தனிப் பிரிவுகளாக சட்டம் வகுத்து போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை தமிழகத்தில் 20 ஆயிரத்து 888 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குறிப்பாக சென்னை மாநகரத்தில் ஆயிரத்து 410 வழக்குகளும், திருச்சி மாநகரத்தில் 221 வழக்குகளும், கோவை மாநகரத்தில் 333 வழக்குகளும், சேலம் மாநகரத்தில் 440 வழக்குகளும், மதுரை மாநகரத்தில் 556 வழக்குகளும், திருநெல்வேலி மாநகரத்தில் 219 வழக்குகளும், திருப்பூர் மாநகரத்தில் 242 வழக்குகளும் என மொத்தம் 7 மாநகரங்களில் கடந்த சுமார் 10 ஆண்டுகளாக மூவாயிரத்து 421 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய வடக்கு மண்டலத்தில் கடந்த சுமார் 10 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 291 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் கடந்த சுமார் 10 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 145 வழக்குகளும், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் 2 ஆயிரத்து 904 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதேபோல் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மண்டலத்தில் 6 ஆயிரத்து 95 வழக்குகளும், சென்னை ரயில்வே கோட்டத்தில் 26 வழக்குகள், திருச்சி ரயில்வே கோட்டத்தில் 6 வழக்குகள் என மொத்தம் ரயில்வே போலீசால் 32 போக்சோ வழக்குகள் கடந்த சுமார் 10 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி அதிகபட்சமாக சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் மாநிலமாக 19 ஆயிரத்து 173 வழக்குகளுடன் மத்திய பிரதேச மாநிலம் முதல்  இடத்திலும், 51 வழக்குகளுடன் நாகாலாந்து மாநிலம் கடைசி இடத்திலும் உள்ளது. யூனியன் பிரதேசங்களில் 7 ஆயிரத்து 118 வழக்குகளுடன் டெல்லி முதல் இடத்திலும், 1 வழக்குடன் லடாக் கடைசி இடத்திலும் உள்ளது. 6 ஆயிரத்து 64 வழக்குகளுடன் தமிழகம் 10-வது இடத்தில் உள்ளதாகவும், பதிவான வழக்குகளில் 91.2 சதவீதம் வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி போக்சோ குற்ற வழக்குகள் தொடர்பான பட்டியலில் உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அதிக வழக்குகளுடன் மாறி மாறி முதல் மூன்று இடங்களில் நீடித்து வரும் நிலையில் அடுத்தபடியாக அதிக போக்சோ வழக்குகளுடன் தமிழகம் உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு மொத்தம் 3 ஆயிரத்து 898 போக்சோ வழக்குகள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் ஜூன் மாதம் வரை மட்டுமே தமிழகத்தில் 2 ஆயிரத்து 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சிறார்களுக்கு எதிரான குற்றச் செயல்களை குறிப்பாக போக்சோ குற்றங்களை தடுக்க பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், போக்சோ குற்ற வழக்குகளின் சதவீதம் அதிகரித்த வண்ணமே இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம்’

Arivazhagan Chinnasamy

காவிரி நீர்: ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

EZHILARASAN D

“ஒரு வீடு, ஒரு வாகனம்”: மும்பை நீதிமன்றம் அதிரடி

G SaravanaKumar