“கர்நாடக முதலமைச்சரை, தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சந்திப்பதில் எந்தவித பயனுமில்லை” – டிடிவி தினகரன்!

கர்நாடக அரசின் முதலமைச்சரை தமிழக முதலமைச்சர் நேரில் சந்திப்பதில் எந்தவித பயனுமில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கடந்த ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீருக்கு 2.91 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே தந்த கர்நாடக அரசு, ஜூலை மாதத்திற்கான 31.24 டி.எம்.சி. தண்ணீரில் 10 சதவீதத்தைக் கூட வழங்காமல் தமிழகத்தையும், தமிழக விவசாயிகளையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

தமிழகத்திற்கான தண்ணீரை வழங்க முடியாது என நேற்றும் கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கும் நிலையில், காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கர்நாடகாவுக்குச் செல்வதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என்று தமிழக விவசாய சங்கங்களும் தெரிவித்துள்ளனர்.

உரிய நேரத்தில் உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்த பின்னரும் தமிழகத்திற்கான உரிய நீரை உரிய நேரத்தில் பெற முடியாத முதலமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடகா சென்று அம்மாநில முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது “கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்” என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் நாளை தமிழகம் வர உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் ராகுல் காந்தி அவர்களை சந்தித்து, காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடக அரசு மேகதாது அணைத் திட்டத்தைக் கைவிடுவதற்கு அரசியல் ரீதியாக உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் கர்நாடக அரசுக்கு தேவையான அழுத்தத்தை வழங்க மறுக்கும் பட்சத்தில், தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் பங்கேற்பு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பதை ராகுல் காந்தி அவர்களிடம் நேரடியாக தெரிவிக்க தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு தைரியம் இருக்கிறதா?

எனவே, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு குறித்து விவாதிக்க கர்நாடக மாநிலத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நிலையில், கர்நாடக அரசின் சட்டவிரோதப் போக்கை சட்டரீதியாக முறியடிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து விவாதிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை மீண்டும் ஓர் முறை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.