காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்: ஊக்கத் தொகை அறிவித்த முதலமைச்சர் விஜய்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற பிரவீன் சித்ரவேலு பிரபு ஆகியோருக்கு முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பல்வேறு போட்டிகளிலும் பதக்கங்களை வென்று வருகின்றனர். அந்த வகையில் ட்ரிபிள் ஜம்ப் போட்டியி தமிழ்நாட்டை சேர்ந்த பிரவீன் சித்திரவேல் வெள்ளியும், செல்வ பிரபு வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர்.

இந்த நிலையில் பதக்கம் வென்ற இரண்டு தமிழ்நாட்டு வீரர்களுக்கும் முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்ததோடு ஊக்கத்தொகையும் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. பிரவீன் சித்ரவேல் அவர்களுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. செல்வ பிரபு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வீரர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக, வெள்ளிப் பதக்கம் வென்ற திரு. பிரவீன் சித்ரவேல் அவர்களுக்கு 30 இலட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற திரு. செல்வ பிரபு அவர்களுக்கு 20 இலட்சம் ரூபாயும் வழங்கப்படும்.

ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இருவீரர்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயின்று, முறையான பயிற்சி பெற்றவர்கள் என்பது தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறைக்குப் பெருமை சேர்ப்பதாகும்.

இவர்களின் கடின உழைப்பும், விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் வெற்றியைத் தேடித்தந்ததோடு, ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை அளிக்கிறது. சர்வதேச அரங்கிலும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற எனது வாழ்த்துகள் !” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.