“அதிமுக எத்தனை முறை அழைத்தாலும் இந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை” என தாம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.
கல்லூரி மாணவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையும் விழா அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை தாம்பரம், காமராஜபுரம் சமூக நல கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் தலைவர் திருமாவளவன் முன்னிலையில் விசிக கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சியின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து திருமாவளவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
எங்கும் இல்லாத அளவிற்கு போதைப் பொருளின் பழக்கம், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் அதிகரித்துள்ளது. அதானியின் துறைமுகங்கள் வாயிலாக போதை பொருள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது என பல்வேறு ஊடகங்கள் ஆதாரப்பூர்வமாக செய்திகளை வெளியிட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றும் பொழுது சுட்டிக்காட்டியுள்ளேன். மத்திய, மாநில அரசுகள் இணைந்து புகையிலை கஞ்சா, மது, மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் அனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் அல்லது தடை செய்ய வேண்டும். புதுச்சேரியில் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக எத்தனை முறை அழைத்தாலும் இந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை. இந்த தேர்தலில் திமுக- பாஜக இடையே தான் போட்டி போல் ஒரு மாயை ஏற்படுத்துகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி இந்தியா கூட்டணி அகில இந்திய அளவிலே உருவாகி இயங்கி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பீகாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த மக்களின் கூட்டத்தை பார்த்து பாஜக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகள் அஞ்சி நடுங்கும் வகையிலே அந்த மாபெரும் மக்கள் கூட்டமானது அமைந்திருந்தது” என தெரிவித்தார்.







