மக்களவைத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை, நாம் தமிழர் கட்சி என்றுமே தேர்தல்களில் தனித்துத் தான் போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிகளை 100% நிறைவேற்றி விட்டேன் என கூறி வருகிறார். ஆனால் ஆசிரியர்கள், செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதன் மூலம் இந்த அரசு வாக்குறுதிகளை 10% கூட நிறைவேற்றவில்லை என தெரிகிறது.
மகளிர் உரிமை தொகைக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு செலவு செய்கிறது. அந்த திட்டத்திற்காக யாருடைய பணத்தை செலவு செய்கிறார்கள். 60 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகின்றன.
ஜெயிலர் திரைப்படத்திற்கு எவ்வித இடையூறும் வரவில்லை. நடிகர் விஜய் நடித்த லியோ படத்திற்கு இசை வெளியீட்டு விழாவில் இருந்தே பிரச்னை தான். அவர் நடித்த படத்தை திரையரங்குகளில் திரையிடப்படும் வரை பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர். நடிகர் விஜய் கட்சி துவங்கி அரசியலில் வருவதாக தெரிந்ததால் தான் கடும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது.
திரையரங்குகள் உங்களிடம் இருப்பதால் தான் மிரட்டி வருகின்றனர். அவர் நடிப்பதை நிறுத்திவிட்டால் என்ன செய்யமுடியும். தேவையில்லாமல் நடிகர் விஜயை சீண்டி விட்டீர்கள். தமிழ்நாட்டை 60 ஆண்டுகாலமாக திராவிட கட்சிகள் ஆண்டு விட்டனர். வரலாற்றை திரும்பி பார்த்தால் பல அரச சாம்ராஜ்யங்கள் வீழ்ந்துள்ளன. அதேபோல் ஒருநாள் திராவிட கட்சிகள் அழியும்.
மக்களவை தேர்தலையொட்டி தென் மாவட்டங்கள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தற்போது வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். மக்களவைத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. கட்சி தொடங்கியது முதலே தெரிவித்து வருகிறேன். நாம் தமிழர் கட்சி என்றுமே தேர்தல்களில் தனித்துத் தான் போட்டியிடும். இந்தியா கூட்டணி, பாஜக என இருபெரும் கட்சிகள் இருந்தாலும் நாம் தமிழர் கட்சி மக்களிடையே தனித்து களம் காணும்.
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.







