“ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை” – எடப்பாடி பழனிசாமி!

ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் திமுக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து 700க்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பு இல்லை. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தான் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

தமிழகத்தில் தினமும் பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது. விஜய் சிறந்த நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சிறந்த அரசியல்வாதி நாங்கள்தான். 41 பேர் யாருக்காக உயிரிழந்தார்கள், திட்டமிடாமல் கரூர் போனதால் தான் 41 பேர் உயிரிழந்தார்கள்.

விளையும் பெயர் முளையிலே தெரியும். ரசிகர் பட்டாளம் அதிகமாக இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேச முடியுமா? யார் டெல்லிக்கு அடிமை என்பது உங்களுக்கு தெரியும், திமுக தான் டெல்லிக்கு அடிமை. புதிய கட்சி ஆரம்பித்தவர் சிறந்த நடிகர், துயரத்தில் உள்ள மக்களை சந்திக்க முடியாத நடிகர், 41 பேர் உயிரிழந்த போது அவருடைய குடும்பத்தாரை கூட நடிகர்களால் சந்திக்க முடியவில்லை.

திமுக ஆட்சி வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுகிறது. தமிழகத்தில் அதிமுக மிகச் சிறப்பான ஆட்சி தந்துள்ளது, மீண்டும் சிறப்பான ஆட்சியை கொடுப்போம். அதிமுக ஆட்சிக்கு வந்த பின் விதிமுறைகளை மீறி விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.