தமிழகத்தில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு தான் காங்கிரஸ் கட்சி வளர வேண்டும் என்ற நிலை உள்ளது என பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ஆளுநர் பிறந்த நாள் இன்று தமிழக மக்களுக்காக சேவை செய்து வருகிறார். கட்சியின் சார்பாகவும் தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்திருப்பதாக அண்ணாமலை கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இறந்து கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை உயிர் பிழைக்க வைப்பதற்கு, பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை தாக்கினால் தான் அந்த கட்சி உயிர் பிழைக்கும் என்று யாரோ தவறாக தெரிவித்து இருக்கிறார்கள்.
கடந்த 10 நாட்களாகவே நான்கு பேர், ஐந்து பேர் கொண்ட சில மர்ம நபர்கள் பாஜக அலுவலகத்தை தாக்கி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியை விட அதிக அளவில் காவல்துறையினர் பாஜக அலுவலகத்தில் பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் இது மாதிரி செய்வது நகைச்சுவையாக இருக்கிறது.
நாகர்கோவிலில் பாஜக அலுவலகத்தை தாக்க முயற்சி செய்வது தேவையில்லாத வேலை. அங்கு இருக்கும் பாஜக தொண்டர்களிடம், யாரும் எதுவும் செய்ய வேண்டாம், அமைதி காக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். காங்கிரஸ் கட்சி பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு தான் தமிழகத்தில் வளர வேண்டிய நிலை உள்ளது என்று கூறினார்.








