சாத்தான்குளம் கொலை வழக்கு ; 9 பேரும் குற்றவாளிகள் ; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு …!

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை தொடர்பான வழக்கில் மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி வழக்கில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து உள்ளிட்ட 9 பேரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இதனை தொடர்ந்து நீதிபதி முத்துகுமரன் தீர்ப்பை வாசித்தார். அதில் அவர் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையின் சாரம்சத்தை குறிப்பட்டார். அதன் படி

மரணம் விளைவிக்க கூடிய காயங்கள்

கோவில்பட்டி கிளை சிறையில் இருவரும் அடைக்கப்பட்ட போது அவர்களது உடல்களில் காயங்கள் இருந்தது. உயிரிழந்த ஜெயராஜிற்கு இருதய மற்றும் நுரையீரல் பிரச்சனை இருந்தது. ஆனால் நோய் தொற்று காரணமாக அவர்கள் உயிரிழக்கவில்லை. கம்பு மற்றும் கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாலே அவர்களது இறப்பு நடந்துள்ளதாக அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையில் கூறியுள்ளனர். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறானது. மரணங்களை விளைவிக்க கூடிய வகையில் காயங்கள் இருந்தது.

உயிரிழந்த பென்னிக்ஸ் தன்னை இரவு முழுவதும் பத்து நிமிடம் இடைவெளி விட்டு விட்டு தொடர்ந்து தாக்கினார்கள், 200 முறைக்கு மேல் எனக்கு பின்னால் தாக்கினார்கள் என அவரது உறவினரிடம் கூறியுள்ளார்.

”நாம் அடித்து பழகுவதற்கு அப்பா, மகன்”

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அடிக்கச் சொன்னதால் தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தாக்கி உள்ளனர். கைகளை கயிற்றால் கட்டி தொங்க விட்டு தாக்கி உள்ளது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. டேபிளில் படுக்க வைத்தும் தாக்கி உள்ளனர். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தாக்கும் போது ”நாம் அடித்து பழகுவதற்கு அப்பா, மகன்” கிடைத்துள்ளனர் எனவும் ”இவர்களை அடித்து நாம் பயிற்சி எடுத்துக் கொள்வோம்” என காவல்துறையினர் அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.

இரவு 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை

தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும் இரவு முழுவதும் சிறிது நேரம் இடைவெளி விட்டு விட்டு காவல்துறையினர் தாக்கி உள்ளனர். இரவு 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து தாக்கி கொண்டே இருந்தனர். குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் அனைவரும் ஒரே பகுதியில் தான் இருந்தார்கள் என்பதை செல்போன் டவர் மூலமாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சாத்தான் குளம் சம்பவம் கொலை என தீர்மானிக்கப்படுகிறது என்று நீதிபதி முத்துகுமரன் தெரிவித்தார்.

பொய் வழக்கு

மேலும் அவர், உயிரிழந்த தந்தை ஜெயராஜ் மகன் பென்னுக்கு ஆகிய இருவர் மீதும் போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என விசாரணையில் தெரிய வந்துள்ளது. காயமடைந்த தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் அணிந்திருந்த ஆடைகள் வழக்கின் முக்கியத்துவம் வாய்ந்தது அந்த ரத்தக்கரை படிந்த ஆடையை உறவினர்களிடம் கொடுத்து குப்பை தொட்டியில் போட சொல்லி உள்ளார்கள் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் அந்த ஆடையை கைப்பற்றி வழக்கு விசாரணைக்கு உட்படுத்தவில்லை.

அனைவரும் குற்றவாளிகள் 

இந்த வழக்கில் சிபிஐ தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது. இந்த வழக்கில் அனைத்து தடையங்களையும் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அளித்துள்ளனர் இந்த வழக்கினுடைய அனைத்து தரப்பு விசாரணைகளையும் பார்க்கும்போது சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது என்று தனது தீர்ர்பில் தெரிவித்தார்.

தொடர்ந்து 9 பேருக்கும் தண்டனை விபரங்கள் மார்ச் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.