ஒரே நாடு – ஒரே நுழைவுத் தேர்வு திட்டம் ஏதுமில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுமைக்கும் ஒரே நுழைவுத்தேர்வைக் கொண்டு வர இருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேசிய பொறியியல் – மருத்துவ நுழைவுத் தேர்வுகளை பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் இணைப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. நாட்டில் இதுவரை நீட், ஜேஇஇ, க்யூட் போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்வுகள் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகின்றன.
அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் இணைத்து ஒரே திட்டத்தில் கொண்டு வரப்படுவதன் மூலம் சமூக நீதி பேணப்படுமா என்பது ஆராயப்பட வேண்டும். இந்தியாவில் 45 தனியார் பல்கலைக்கழகங்கள் உட்பட 90 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இவற்றில் இளங்கலை மாணவர்கள் சேர்க்கைக்காக க்யூட் நுழைவுத்தேர்வு இந்த ஆண்டு தொடங்கப்பட்டது. பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதற்காக விண்ணப்பித்திருக்கிறார்கள் என்று தேசிய தேர்வு முகமை தெரிவிக்கிறது. மேலும் 18 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி உள்ளனர். இதன் அடிப்படையில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் படி ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு என்ற கருத்தை வலிமைப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்தி வருகிறது மத்திய அரசு. இதற்கு பல மாநிலங்களில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன.
இதுகுறித்து, ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் மாணவர்களிடையே உரையாற்றிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், NEET, CUET, JEE உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை இணைத்து ஒரே நுழைவுத் தேர்வாக அறிமுகப்படுத்தும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
CUET தேர்வுடன் NEET, JEE தேர்வுகளை இணைத்து ஒரே நுழைவுத்தேர்வாக அறிமுகப்படுத்தும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக UGC & AICTE தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்திருந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் மன அழுத்தமின்றி, தேர்வுக்கு நல்லமுறையில் தயாராகவும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தியுள்ளார்.
-ம.பவித்ரா








