சிவகங்கையில் நேற்று நள்ளிரவு இளைஞர் ஓட, ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 16 வயது சிறுவன் உட்பட 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
சிவகங்கையை அடுத்துள்ள வைரவன்பட்டியை சேர்ந்தவர் பண்ணைமுத்து மகன் சிவா
என்ற பரமசிவம். இவர் மீது வந்தவாசி ராஜசேகரன் கொலை வழக்கு உட்பட 15 வழக்குகள்
உள்ளன. இந்நிலையில் இவர் கடந்த 2019ல் சிவகங்கையை விட்டு தலைமறைவானார். சில
மாதங்களுக்கு முன்பு மீண்டும் சிவகங்கை தொண்டி ரோட்டில் குடியேறினார்.
இந்நிலையில் நேற்று இரவு பூச்சொரிதல் விழாவிற்கு நண்பர்களுடன் வந்திருந்த அவரை காரில் வந்த கும்பல் இவரை வழிமறித்தது. அவர்களிடமிருந்து தப்பித்து ஓடியபோது அந்த கும்பல் விரட்டி விரட்டி வீச்சரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் தனிப்படை போலீசார் கொலையாளிகள் வந்த கார், அங்கு கிடந்த ஒருவரின் அடையாள அட்டையை கைப்பற்றியது. இக்கொலை தொடர்பாக உசிலம்குளத்தைச் சேர்ந்த ஆனந்தம், ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ், ராஜமருது உட்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் திருப்புவனம் புதூரைச் சேர்ந்த ரிஷி குமார் , பரணி குமார், கார்த்திக் ராஜா மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய நால்வரை கைது செய்துள்ளனர். மேலும் தங்கராஜிற்கும் கொலை செய்யப்பட்டு இறந்த பரமசிவத்திற்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகவும் அதற்கு பழிதீர்க்கவே இந்த கொலை நடந்ததாகவும் விசாரனையில் தெரியவந்துள்ளது.








