200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி என்கிற இலக்கை கடந்துள்ள இந்தியாவிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 30ந்தேதி கேரளாவில் முதல் முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த, மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டன. அதற்கு நல்ல பலன் கிடைத்து கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. இதற்கு கொரோனா தடுப்பூசியும் முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த ஆண்டு ஜனவரி 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின.
பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில் 200 கோடி டோஸ் என்கிற இலக்கை வெற்றிகரமாக இந்தியா கடந்துள்ளது.
இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா மீண்டும் வரலாறு படைத்துள்ளதாகக் பெருமிதம் தெரிவித்தார். 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதையடுத்து நாட்டு மக்களுக்கு தான் வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்படுவதற்கு துணை நின்ற அனைவரையும் நினைத்து தாம் பெருமைப்படுவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். கொரோனாவிற்கு எதிரான உலகின் யுத்தத்தை இந்தியா வலிமைப்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதற்காக இந்தியாவிற்கு உலக சுகாதார அமைப்பும் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின், தெற்கு ஆசிய நாடுகளுக்கான மண்டல இயக்குனர் பூனம் கேத்ரபால் சிங், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா காட்டும் ஈடுபாட்டிற்கு இது மற்றொரு உதாரணம் என தெரிவித்துள்ளார்.







