புதுச்சேரியில் பணிநிரந்தரம் கோரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டடம் மீது ஏறி ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களுக்கு பணி நிரந்தர ஆணைகளை முதலமைச்சர் ரங்கசாமி இரவோடு இரவாக வழங்கினார்.
புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இதில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் கடந்த 2011-ஆம் ஆண்டில் இருந்து 650-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வந்தனர். மேலும் 12 ஆண்டுகளாக எந்த ஒரு பணி உத்திரவாதமும் இன்றி மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் பெற்று வந்த அவர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மருத்துவக் கல்லூரி கட்டடத்தின் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போராட்டம் தொடர்ந்த நிலையில், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்திய நிலையில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று மாலை ஒப்புதல் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அப்பா பைத்தியசாமி கோயிலில் முதல்வர் ரங்கசாமி பணி ஆணையை வழங்கினார்.








