முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சாதனைகள் படைத்து வரும் பெண்களுக்கு, உலக மகளிர் தின வாழ்த்து: வைகோ

சர்வதேச உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் மகளிருக்கு, உலக மகளிர் தின வாழ்த்துகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 8-ஆம் நாள் உலக மகளிர் நாளாகும். அமெரிக்க நாட்டிலும், ஐரோப்பிய நாடுகளிலும் 19-ஆம் நூற்றாண்டிலிருந்தே பெண்கள் உரிமைக்களுக்காகப் போராடினார்கள். கிளாராஜெட்கின்ஸ் அம்மையாரின் தலைமையில் பெண்களின் உரிமை காக்கும் இயக்கம் தோன்றியது. பல ஆண்டுகள் போராடிய பின்னரே இங்கிலாந்து நாட்டில் பெண்கள் வாக்குரிமை பெற்றார்கள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ என்றார் திருவள்ளுவர். சங்க காலத்திலேயே பாடல்கள் புனைகின்ற பெண்பாற் புலவர்கள் இருந்தார்கள். வேந்தனின் அரசவையிலேயே கோவலன் கொலைக்கு நீதி கேட்டு எரிமலையாய்ச் சீறிய கண்ணகியின் காப்பியத்தை இளங்கோவடிகள் சிலப்பதிகாரமாகப் படைத்தார்.

20-ஆம் நூற்றாண்டில் பெண் உரிமைக்காக தந்தை பெரியார் சங்கநாதம் எழுப்பினார். பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று செங்கல்பட்டு மாநாட்டில் தந்தை பெரியார் பிரகடனம் செய்தார். அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு என்று சட்டம் இயற்றினார்.

இடைக்காலத்தில் பல்வேறு அடிமைத் தளைகள் பூட்டப்பட்டன. அவைகளை அடித்து நொறுக்கி, பெண்களை வீரத் தமிழச்சிகளாக உயர்த்திட்ட பெருமை திராவிட இயக்கத்தைச் சாரும்.

வாரிசு உரிமை, மணவிலக்கு, மறுமணம், வரதட்சணை ஒழிப்பு, தேவதாசி ஒழிப்பு என அடுக்கடுக்கான மகளிர் நலச் சட்டங்களை இயற்றியும், தேர்தலில் வாக்கு அளிக்கவும், வேட்பாளர்களாகப் போட்டியிடவும் பெண்களுக்கு வாய்ப்புத் தந்து பெருமைப்படுத்தியதும் திராவிட இயக்க ஆட்சிதான்.

பெண்களுக்கு பெருமை தரும் வாய்ப்புக்களை தற்போது ஏற்படுத்தி இருப்பது மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடைய திராவிட மாடல் ஆட்சிதான். அதில்தான் அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 30 சதவிகிதமாக இருந்ததை, 40 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 2,756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பணிபுரியும் பெண்கள் நலன் காக்க 9 மாத பேறுகால விடுமுறை, 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில், சட்டமன்றங்களில் 33 சதகிவித இடஒதுக்கீடு மகளிருக்கு வழங்க வேண்டும் என்று திராவிட இயக்க ஆட்சி தொடர்ந்து முழங்கிக்கொண்டு இருக்கிறது. அதுவும் நிறைவேறும் காலம் தொலைவில் இல்லை.

இன்றைய 21 ஆம் நூற்றாண்டு கணினி யுகத்தில் பெண்கள் எல்லா நிலைகளிலும் முன்னேறிப் பாய்ந்து செல்வதைக் கண்டு அகிலம் வியக்கின்றது. தமிழ் இனத்தின் வரலாற்றில் பெண்கள் உன்னதமான மதிப்பைப் பெற்றிருக்கிறார்கள். பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் மகளிருக்கு, உலக மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டாஸ்மாக் நாளை இயங்காது.

EZHILARASAN D

துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது வீட்டில் பாய்ந்த குண்டு

G SaravanaKumar

வாத்தி பாடலுக்கும் நடனமாடிய அஸ்வின்!

Niruban Chakkaaravarthi