மதுரை அழகர்கோவிலில் சித்திரை திருவிழா உண்டியல்களை எண்ணும் பணி தொடங்கியது.
தென்னகத்தின் பெருவிழாவாக கொண்டாடப்படும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 29 ஆம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் , மே 2 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்ட வழிபாடுகளைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் நடைபெற்றது. அதன்பின்னர், ராமராயர் மண்டபத்துக்கு எழுந்தருளிய கள்ளழகர், அங்கு கருப்பண்ண சாமியிடம் ஆசிர்வாதம் பெற்றார். அதனைத் தொடர்ந்து, தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் நியூஸ் 7 தமிழின் பக்தி யூ டியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பாகின.
இதனை தொடர்ந்து மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்ற கள்ளழகர், அனைத்து நிகழ்வுகளையும் முடித்துக் கொண்டு அழகர் மலைக்கு வந்தடைந்தார். வழிநெடுகிலும் அவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வண்டியூர் வரை அழகர் ஊர்வலம் சென்று அழகர்மலைக்கு திரும்பி வந்த அழகருக்கு வழியெங்கும் பக்தர்கள் அழகரை தரிசித்து உண்டியலில் காணிக்கைகள் செலுத்தினர். திருவிழா முடிந்து தற்போது அந்த உண்டியல்கள் சீல் உடைத்து எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன. 39 உண்டியல்களில் உள்ள பணத்தை 200 க்கும் மேற்பட்டவர்கள் எண்ணி வருகிறார்கள்.
- பி.ஜேம்ஸ் லிசா








