மானாமதுரையில் கண்மாயை அடைத்து ஒரு பிரிவினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவிற்கு உட்பட்ட விளாக்குளம், செய்யாலூர், சேத்தனேந்தல், கள்ளிச்சேரி, மேலப்பெருங்கரை, கீழ்ப்பெருங்கரை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும்,விவசாய பயன்பாடுகளுக்கு தேவையான தண்ணீரை கண்மாய்களுக்கு கொண்டு செல்லும் இடமாகவும் உள்ளது தாயமங்கலம் ரோட்டில் உள்ள பகுதி.இந்நிலையில் இந்த இடத்தை சமீபத்தில் தமிழக அரசு ஒரு தரப்பினருக்கு வீட்டுமனை பட்டாவாக வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த 15க்கு மேற்பட்ட கிராம மக்கள் இந்த இடத்தை
பட்டா நிலமாக அரசு மாற்றினால் பதினைந்திற்க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவை கேள்விக்குறியாகும்,மேலும் கால்நடைகளுக்கு தேவையான மேய்ச்சல் நிலங்களும் பறிபோகும் அபாயம் உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து இன்று காலையில் திடீரென வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற தாசில்தார் ராஜா இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
—வேந்தன்







