முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

“ஒட்டுமொத்த காட்டையே அறுக்கும் ரம்பம் தேசத் துரோக வழக்கு”


மரிய ரீகன் சாமிக்கண்ணு

கட்டுரையாளர்

தேச துரோக சட்டப்பிரிவு உச்சநீதிமன்றத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் இந்த சட்டத்தின் கீழ் மறு உத்தரவு வரும் வரை எந்த வழக்குகளையும் பதியக் கூடாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளனர். தேச துரோக வழக்கு என்றால் இந்தியாவில் என்ன? அதனை அரசுகள் எதற்காக பயன்படுத்துகின்றன? தேச துரோக வழக்கையே நீக்க வேண்டும் என்ற குரலில் இருக்கும் நியாயங்கள் என்ன? என்பதை தான் இந்த கட்டுரை விளக்குகிறது.

ராஜ துரோகம் தேச துரோகமான வரலாறு:
124A என்ற சட்டப்பிரிவை இந்தியாவில் தேச துரோக வழக்கு என்று கூறுகிறார்கள். இந்த சட்டம் என்பது தேச துரோகம் என்று கூறுவது தவறு ராஜ துரோகம் என்பதே உண்மையில் அதன் அர்த்தமாக கொள்ளப்படுகிறது. பிரிட்டீஸ் ஆட்சியில் அரசனுக்கு எதிராக கிளர்ச்சி செய்தல், அரசனை கொலை செய்தல், அரசு மீதான அன்பை, மரியாதையை சிதைக்கும் வகையில் செயல்படுபவர்களை தண்டிப்பதற்காக பிரிட்டனில் ராஜ துரோகமாக கருதி அவர்களை தண்டிப்பார்கள். பிரிட்டனில் அப்போது அரசு என்பது பிரிட்டன் ராணியையும் அவர்களின் ஊழியர்களையும் குறிப்பிடுவதாக இருந்தது. அதாவது, பிரிட்டன் ராணிக்கு எதிராக கிளர்ச்சியை, வெறுப்பை தூண்டுபவர்களாக இருந்தால் அவர்கள் மீது ராஜ துரோகம் என்ற பெயரில் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
பிரிட்டன் ராணி என்பவர் சாதாரண மக்களுக்கு அப்பாற்பட்டவர். அவர் தெய்வம். மனிதர்களுக்கு ஓடும் ரத்தம் ராணிக்கு ஓடுவது இல்லை என்று அந்த மக்கள் நம்பினார்கள். இதற்கு எதிராக ஒருவர் பேசினால், அவர் ராஜ துரோக வழக்கில் கைது செய்து தண்டிப்பார்கள்.

காந்தி மீது பாய்ந்த தேச துரோகம் :
மகாத்மா காந்தி மீது பிரிட்டீஸ் காலனிய ஆட்சியின் போது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தான் நடத்தி வந்த எங் இந்தியா பத்திரிகையில் தேச தந்தை மகாத்மா காந்தி பிரிட்டிஸ் அரசுக்கு எதிராக எழுதியதால் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தன் மீதான தேச துரோக வழக்கில் தானே ஆஜராக வாதாடிய காந்தி, சுதந்திர இந்தியாவிற்காக பேசுவது தவறு என்றீர்களானால், இந்த தவறை மீண்டும் மீண்டும் செய்வே. எனக்கு அதிக பட்ச தண்டனையைக் கொடுங்கள் என்று வாதாடினார். அதாவது, மெக்காலேவின் முதல் சட்ட ஆணையத்தில் தான் இந்த 124A பிரிவானது சேர்க்கப்பட்டு தேச துரோகமாக இந்தியாவில் பார்க்கப்பட்டது.

தேச துரோகம் என்று குழம்புகிறோமா?:
சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உருவாக்கப்பட்டது. குடியரசு நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டது. இதில், மக்கள் தாங்களே அரசர்களாக மாறினார்கள். மக்கள் எல்லோருமே அரசர்களாக இருக்கும் போது மக்கள் தங்களுக்கு எதிராக எப்படி அரச துரோகம் செய்ய முடியும்? குடியாட்சி அரசில் மக்கள் எப்படி தங்களுக்கு எதிராகவே குற்றம்சாட்டப்பட முடியும்? அதாவது, குடியரசு ஆட்சி இந்தியாவில் வந்த பிறகு அரசனுக்கு எதிரான துரோகம் என்றால் என்ன என்பதை வேறுபடுத்தி பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டிஸ் ராணிக்கு பதிலாக குடியரசு தலைவர். பிரிட்டன் அரசுக்கு பதிலாக மத்திய அரசு என்ற மனநிலை இருப்பதால் தான் ராஜ துரோகம் என்பதை தேச துரோகமாக பார்க்கும் மனநிலையானது உருவாகியுள்ளது. குடியரசு ஆட்சிக்கும் மன்னராட்சிக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. தேசம் என்பதை தனிப்பட்ட நபராக பார்க்கிறார்கள். தேசம் என்பது அரசியலமைப்பு சட்டத்திலேயே இல்லை. மாநிலங்களின் தொகுப்பாக இந்தியாவில் மத்திய அரசு உள்ளது. இந்த பின்னணியில் தேச துரோகமாக அதை எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? கருத்தியல் ரீதியாக இது தவறான புரிதலில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படையில் 124A என்பதே தவறானதாக உள்ளது. இது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவதை அடிப்படையாக கொண்ட மத்திய அரசு தான் இங்கு உள்ளது. நாடு என்பதே பல மாநிலங்களின் தொகுப்பாக இருக்கிறது. பிரிட்டனைப் போல் இங்கு ஒற்றை நாடு இல்லை. இங்கு, நாடு என்பதற்கான இலக்கணமே வேறுபடுகிறது.
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் – தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் என்று தமிழ் தாய் வாழ்த்து பாடலில் உள்ளது. இந்த பாடலில், இந்தியா என்பது ஒரு கண்டமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை ஒரு நாடாக பார்க்கிறார் பெ. சுந்தரம் பிள்ளை. இந்தியா ஒரு நாடாக இருக்கும் போது அதற்கு எதிராக தமிழ்நாடு என்று பேசினால், யார் யாரெல்லாம் இந்த பாடலை பாடுகிறார்களோ அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய முடியாது. காரணம் இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கி இருக்கும் உரிமையின் அடிப்படையில் தமிழ்நாட்டையும், தமிழ் மொழி பெருமையை கூறும் வகையில் இந்த பாடல் உள்ளது.

இந்த விவகாரத்தை நமது அரசமைப்பு சட்டம் வேறு விதத்தில் பார்க்கிறது. இந்தியா என்பது பிரிட்டீஸ் நாடு போன்றது அல்ல. இந்தியா ஒரு ஒன்றிய அரசாக உள்ளது. இதில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்த அடையாளம் உண்டு. அதன்படி, ஒரே நாடு என்பதும், ஒரே மொழி என்பதும், ஒற்றைக் கலாச்சாரம் என்பதுமே இந்திய அரசமைப்புக்கு எதிரானது. இதனை பேசுபவர்கள் மீது 124A வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். அதாவது, இந்தியாவில் இந்தி மட்டும் தான் தேசிய மொழி என்று கூறுவதே தேசத்திற்கும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் எதிரானது.அதாவது, இந்தியாவில், அலுவல் மொழி, தொடர்பு மொழி என்று இருக்கிறது. ஆனால், தேசிய மொழி என்று ஒன்று இதுவரை இல்லை. இல்லாத ஒன்றை இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுபவர்கள் மீது 124 A வழக்கு பதிவு செய்யலாம்.

சட்டப்பூர்வ அணுகுமுறை:
சுதந்திர காலத்திலும், அதன் பிறகு மிசா காலத்திலும் பலர் 124A சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டார்கள். பாட்னாவில் நடந்த மாநாட்டில் பேசிய ஜெயப்பிரகாஷ் நாராயணன், இந்திய ராணுவம் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க கூடாது என கூறினார். அவரும் 124A சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூட இதே சட்டப்பிரிவின் கீழ் தான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்குகளில் நீதிமன்றம் ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. அதாவது, ஒருவரின் பேச்சால் கலவரம் ஏற்பட்டு, பொது சொத்துக்கு குந்தகம் விளைவித்தால், மக்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே அது தேச துரோகம் என்று ஆகும். வைகோ பேச்சால் கலவரம் ஏற்படவில்லை. பொது சொத்துக்கு குந்தகம் விளையவில்லை எனவே இது தேச துரோகம் ஆகாது என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். காந்தி காலம் தொடங்கி வைகோ தீர்ப்பு வரை இந்த 124A சட்டப்பிரிவு எவ்வளவு மாற்றம் கண்டுள்ளது என்பதை பார்க்கலாம். தற்போது, இந்தியா முழுமைக்கும் 124A சட்டப்பிரிவில் 13,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காஷ்மீர் பற்றி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேசிய மாணவர்கள் தேச துரோக வழக்கில் கைது செய்யப்படுகிறார்கள். இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஸ்வீடனைச் சேர்ந்த செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பர்க் ட்விட்டரில் பகிர்ந்த `டூல்கிட்` தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த மாணவியும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான செயலாளருமான 22 வயதாகும் திஷா ரவி இதே சட்டத்தில் கைது செய்யப்படுகிறார். வைகோவால் கலவரம் வெடிக்கவில்லை. பொது சொத்துக்கு குந்தகம் விளையவில்லை. என்றால் டெல்லி மாணவர்கள், திஷா ரவியாலும் எந்த கலவரம், பொது அமைதி குலையவில்லை. இருந்தாலும் அவர்கள் மீது தேச துரோக வழக்கானது பதியப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தான் சட்டப்பூர்வமான அணுகுமுறையை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கும் 124A சட்டப்பிரிவை நீக்க வேண்டிய நிலைக்கும் நீதிமன்றம் வந்துள்ளது.
இந்தியாவில் நீதிபதிகளின் காலி பணியிடங்கள் அதிகமாக உள்ளது. இந்த சூழலில், கடந்த 8 ஆண்டுகளில் தேச துரோக சட்டத்தில் கைது செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தேச துரோக வழக்கில் கைதாகுபவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்க முடியாமல் போகிறது. இது நீதிமன்றத்தின் வேலையை கடுமையாக பாதிக்கிறது. இந்த பின்னணியில் கூட இதை புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு காலனிய பிரிட்டீஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, பின்பற்றப்பட்ட ஒரு சட்டம் சுதந்திர இந்தியாவில் அதன் மக்கள் மீதே பயன்படுத்துவது என்பது தவறான நடைமுறை. அதனை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் கருத்தை பார்க்க வேண்டியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா சொல்வது போல் “ஒரு மரத்தை அறுக்க கொடுக்கப்பட்ட ரம்பத்தைக் கொண்டு ஒட்டுமொத்த காட்டையே அழிப்பதற்கு இணையாக ஒப்பிடலாம்” என்றார். அண்மைக்காலமாக இந்தியாவில் 124A மூலம் பதியப்படும் வழக்குகள் அதை தான் காட்டுகின்றன. இந்திய அளவில் 124A சட்டத்தில் அதிக வழக்குகளை பதிவு செய்யும் மாநிலமாக பீகாருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. எனவே, நீதிமன்றத்தின் நேரத்தை வீண் விரையம் செய்யாமல் இருக்க வேண்டிய நிலையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா சுயபரிசோதனைக் கருவிகளை பயன்படுத்தக் கூடாது: அமைச்சர்

Halley Karthik

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கடல் சீற்றம்

Arivazhagan CM

ஆன்லைன் வியாபாரம் ஒரு மோசடி தொழில் : விக்கிரம ராஜா

Ezhilarasan