முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திமுக மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை குறைப்பா ?

திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை 77ல் இருந்து 55 ஆக குறைக்க அக்கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆளுமையான தலைமையை மாவட்டங்கள்தோறும் உருவாக்கவே இந்த முடிவை திமுக எடுத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் பன்முகத்தன்மையுடன் இளைய தலைமுறையினரை கவரும் வண்ணம் இருக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் அரசினால் அறிவிக்கப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் வார்டு கிளைக் கழக நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என அதிகாரபூர்வமாக முரசொலியில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சூழ்நிலையில் கட்சியின் வளர்ச்சி பணிகளை செம்பட மேற்கொள்ள மூன்று தொகுதிகளுக்கு குறைவான மாவட்டங்களை பிற மாவட்டங்களுடன் இணைக்கலாமா ? என திமுக தலைமை தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது.

திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தலை ஜூன் மாதத்திற்குள் நடத்தி முடிக்க அக்கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது. நிர்வாக வசதிக்காக கட்சியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் திமுகவில் 77ஆக உள்ள மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 55ஆக குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஓரு சேர இருப்பதால், திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு திடகாத்திரமான முடிவு எடுப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர்களாக இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால் அவர்கள் வகித்து வரும் மாவட்டச் செயலாளர் பதவியை மற்றவர்களுக்கு வழங்குவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் அரசினால் அறிவிக்கப்பட்ட வார்டு எண்ணிக்கை 200 ஆகும். ஆனால் கட்சி நிர்வாக வசதிக்காக இதனை 400 உயர்த்தலாம் என மூத்த மாவட்டச் செயலாளர்களாக உள்ள சேகர்பாபு, மா சுப்பிரமணியன் போன்றோர் கட்சி தலைமைக்கு வேண்டுகோள் விடுத்தனர். இப்போதைய சூழலில் இது தேவையில்லை என தலைமை தெரிவித்துவிட்டதாக தெரிகிறது.

அதேபோல், திருச்சி மாநகர திமுகவை 130 வட்டங்களாக அதிகரிக்க முடிவு செய்து, அவற்றுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்த கட்சித் தலைமை, கவுன்சிலர்கள் எண்ணிக்கைப்படி 65 வட்டங்களுக்கு மட்டுமே புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

திருச்சி மாநகராட்சியைப் பொறுத்தட்டில் கவுன்சிலர்கள் எண்ணிக்கையிலான 65 வார்டுகளில் பெரிதாக இருந்த சிலவற்றை சில ஆண்டுகளுக்கு முன் இரண்டாகப் பிரித்து 93 வார்டுகளாக மாற்றினர். அவை அனைத்துக்கும் தனித்தனி வட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த சூழலில் திமுக தலைமையின் தேர்தல் அறிவிப்பில் 65 வார்டுகளை மட்டுமே குறிப்பிட்டிருந்ததால், மீதமுள்ள வார்டுகளில் என்ன விதமான மாற்றங்களை கொண்டு வரலாம் என அம்மாவட்ட நிர்வாகிகள் தீவிர ஆலோசனையில் உள்ளனர்.

இதுபோலவே  கோவை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் கவுன்சிலர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் இரு மடங்கான வார்டுகள் தற்போது உருவாக்கப்பட்டன. இவ்வாறு செய்தால், தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதில் குளறுபடி ஏற்படும் என்பதால் தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் கவுன்சிலர்களின் எண்ணிக்கையில் மட்டுமே வட்டங்கள் இருக்க வேண்டுமென திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் ஒன்றிய செயலாளர்கள்,பகுதி செயலாளர்கள் எண்ணிக்கையும் மாற்றி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராமானுஜம்.கி

Advertisement:
SHARE

Related posts

பிரதமருக்கு மாம்பழங்கள் அனுப்பிய மம்தா

Halley Karthik

மீண்டும் ஆன்லைன் தேர்வு; அமைச்சர் பேட்டி

Saravana Kumar

பாக்கெட் மணிக்காக சண்டை? அப்பாவின் துப்பாக்கியால் சுட்டு மாணவர் தற்கொலை

Ezhilarasan