வேளாங்கண்ணி பேராலயத்தின் இந்தாண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ந் தேதி
கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து ஆண்டு பெருவிழா நடைபெறும். செப்டம்பர் மாதம் 8 -ந் தேதி மாதாவின் பிறந்த நாள்
விழாவாக கொண்டாடப்படும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி திருவிழா எளிமையாக நடத்தப்பட்டது. இந்நிலையில், வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. பேராலயத்தில் இருந்து தொடங்கிய கொடி ஊர்வலமானது, லட்சக்கணக்கான பக்தர்கள் இடையில் கடற்கரை சாலை, ஆரிய நாட்டுத்தெரு வழியாக மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் சார்பில் ஊர்வலமாக சென்று மீண்டும் பேராலய முகத்திற்கு எடுத்து வரப்பட்டது.
பின்னர் மாதா உருவம் பொறித்த கொடியை தஞ்சை மற மாவட்ட ஆயர் தேவதாஸ் ஆம்புரோஸ் புனிதம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாதா வாழ்த்து பாடலுடன் வானவேடிக்கை மிளிர கொடியானது கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது ஆவே மரியே… மரியே வாழ்க என பக்தர்கள் வாழ்த்து பிரார்த்தனை செய்தனர். கொடியேற்ற
நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் உள்ளிட்ட பாதிரியார்கள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள்
பங்கேற்றனர்.
முக்கிய நிகழ்வான வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி செப்டம்பர் 7-ம் தேதியும் அதனைத் தொடர்ந்து மாதா பிறந்த தினமான செப்டம்பர் 8-ஆம் தேதி சிறப்பு திருப்பலி பேராலயத்தில் நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 27 உயர் கண்காணிப்பு கோபுரம், 4 ஆளில்லா விமானம் மற்றும் 760 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன.
– இரா.நம்பிராஜன்








