பொறியியல் கலந்தாய்வு காலதாமதம்-உயர்கல்வி நிறுவனங்களில் கணிசமான இடங்கள் காலியாகும் சூழல்

நீட் தேர்வு முடிவுகளுக்குப் பின் பொறியியல் கலந்தாய்வு தொடங்கினாலும், மருத்துவக் கலந்தாய்வு தாமதமாக தொடங்க உள்ளதால், இந்த ஆண்டும் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் கணிசமான இடங்கள் காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம்…

நீட் தேர்வு முடிவுகளுக்குப் பின் பொறியியல் கலந்தாய்வு தொடங்கினாலும்,
மருத்துவக் கலந்தாய்வு தாமதமாக தொடங்க உள்ளதால், இந்த ஆண்டும் முன்னணி
உயர்கல்வி நிறுவனங்களில் கணிசமான இடங்கள் காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 431 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.48 லட்சம் இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு கடந்த 20-ம் தேதி தொடங்கியது.

சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், நீட் தேர்வு
முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் பொதுப் பிரிவினருக்கான
பொதுக் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டது.

நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் நிலையில்,
செப்டம்பர் 10-ம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு
நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், முன்கூட்டியே கலந்தாய்வு நடத்தப்பட்டு அதில் சேரும் மாணவர்கள் நீட்
தேர்வு முடிவுகளுக்குப் பின் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக பொறியியல்
கல்லூரிகளை விட்டு வெளியேறுவது முற்றிலும் குறையும் என்றும், அதன் மூலம் அண்ணா
பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னனி உயர்கல்வி நிறுவனங்களில் கணிசமான இடங்கள்
காலியாவது தடுக்கப்படும் என்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி
தெரிவித்திருந்தார்.

ஆனால், நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ல் வெளியானாலும், கட்-ஆப்
மதிப்பெண்கள், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, மருத்துவக் கலந்தாய்வு
தொடங்குவதற்கே மேலும் 10 நாள் அவகாசம் தேவைப்படும் என்பதால், செப்டம்பர் 10-ம்
தேதி முதல் பொறியியல் கலந்தாய்வை நடத்தினாலும் இடங்கள் காலியாவதைத் தவிர்க்க
முடியாது என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கடந்த கல்வியாண்டில் ( 2021-22 ) மட்டும் அண்ணா பல்கலைக்கழகத்தின் 4
வளாகக் கல்லூரிகளான CEG, ACT, SAP, MIT ஆகியவற்றில் 25% இடங்கள் அதாவது 350
இடங்கள் காலியாக இருந்தன.

மருத்துவக் கலந்தாய்வுக்கு முன்னரே பொறியியல் கலந்தாய்வை நடத்தி முடித்ததன்
காரணமாக, பொறியியல் கலந்தாய்வு மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக்
கல்லூரிகள் & இதர முன்னனி பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் 600 பேர்,
பொறியியல் கல்லூரிகளில் இருந்து விலகி, மருத்துவக் கல்லூரிகளைத் தேர்வு
செய்ததன் காரணமாக 600 இடங்கள் இப்போது வரை காலியாகவே இருந்து வருகிறது.

இதனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் பயில வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் இதர மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அவர்கள் இரண்டாம் நிலை கல்லூரிகளில்
சேர்ந்த சூழலும் நிலவியது.

இதைத் தவிர்க்கவே, நீட் முடிவுகளுக்குப் பின் பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது என்று அரசு கூறினாலும், தாமதமாக தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வால் இந்த ஆண்டும் அதே நிலை தொடர வாய்ப்பிருப்பதாகவே கல்வியாளர்கள் கருத்துகளை முன் வைக்கின்றனர்.

செப்டம்பர் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் முதற்கட்ட பொறியியல்
கலந்தாய்வில் பங்கேற்க கட் – ஆப் 184 முதல் 200 வரை பெற்றுள்ள மாணவர்கள்
அழைக்கப்படுவார்கள்.

கட் – ஆப் 184 முதல் 200 வரை பெற்றுள்ள மாணவர்கள் நீட் தேர்வையும்
எழுதியிருப்பார்கள். கட் – ஆப் 184 முதல் 200 வரை உள்ளவர்களுக்கு பொறியியல் கலந்தாய்வில் அண்ணா பல்கலைக்கழகம், இதர அரசு பொறியியல் கல்லூரிகள், முன்னனி தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஒதுக்கப்படும்.

இவர்களைக் கொண்டே அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விடும் சூழலில், 2-ம் கட்ட
கலந்தாய்வில் பங்கேற்கும் கட் – ஆப் 160 முதல் 183 வரை உள்ள மாணவர்களுக்கு இதர
இரண்டாம் நிலை கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்நிலையில், முதற்கட்ட கலந்தாய்வில் டாப் 50 பொறியியல் கல்லூரிகளில் சேரும்
மாணவர்கள், மருத்துவக் கலந்தாய்விலும் பங்கேற்று அரசு ஒதுக்கீட்டில் இடங்களைத்
தேர்வு செய்தால் அங்கு இடம்பெயருவார்கள்.

அப்போது அவர்களுக்காக முன்கூட்டியே டாப் 50 பொறியியல் கல்வி நிறுவனங்களில்
ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாகிவிடும்.

இம்முறை பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்யும்
மாணவர்கள் சேர்க்கை ஒதுக்கீட்டு ஆணை கிடைத்த 7 நாட்களுக்குள் கட்டணத்தை
செலுத்திட வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடும் கொண்டு வரப்பட்டுள்ளது.


இதன் மூலம் இடங்கள் வீணாவது குறையும் என்று உயர் கல்வித் துறை அதிகாரிகள்
கூறினாலும், மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தால், கட்டணம்
செலுத்தியிருந்தால் கூட பொறியியல் கல்லூரிகளை விட்டு வெளியேற மாணவர்கள்
தயாராகவே இருப்பார்கள் என்ற தகவலையும் கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர்.

டாப் 50 பொறியியல் கல்வி நிறுவனங்களில் இடங்கள் வீணாவதைத் தடுக்க, கலந்தாய்வை உயர்கல்வித் துறை தள்ளி வைத்தாலும், தாமதமாகும் மருத்துவக் கலந்தாய்வால் இடங்கள் வீணாவது தவிர்க்க முடியாதது என்றே கல்வியாளர்கள் முன்வைக்கும் கருத்தாக உள்ளது.

இதுகுறித்து உயர் கல்வித் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, தாமதமாக
தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வால் முதற்கட்ட கலந்தாய்வில் இடங்கள்
காலியானாலும், அவற்றை அடுத்தடுத்து நடைபெறும் கலந்தாய்வு மூலம் நிரப்ப
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த ஆண்டில் இடங்கள் வீணாவது சற்று
குறையும் என்றும் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.